முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அவரின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் கலையரங்கில் இன்று மாலை நடந்தது. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். படம்: ஜெ.மனோகரன்
கோவை: இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் தமிழ்நாட்டில் மத அரசியல் செய்வது திமுக தான் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அவரின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் கலையரங்கில் இன்று மாலை நடந்தது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் அதிகம் விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கிறது. பேருந்துகளின் தரத்தை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
கிறிஸ்துமஸ் விழாவில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் மிகப்பெரிய குற்றம். விரும்பத்தகாத வருத்தப்படக்கூடிய செயல்கள் ஆகும். இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பிரதமர் டெல்லியில் சர்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதை விட நாட்டிற்கு என்ன செய்தியை பிரதமர் கூற முடியும். தேர்தலுக்கு 3 மாதங்கள் உள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிகள் இடம் பெறுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். வலிமையாக தேர்தல் களத்தில் பெரியளவில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் பார்த்து கொண்டுள்ளோம்.
‘எஸ்ஐஆர்’ பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 கோடியே 41 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் போது, சில தவறுகள் நடப்பது சகஜம்தான். நியாமானவர்களை சேர்க்க வேண்டும் என்றால் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும். திமுக கடைசி 100 நாட்கள் ஆட்சியில் இருப்பார்கள். அதற்கு பின் தூக்கி ஏறிப்படுவது உறுதி. இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் தமிழ்நாட்டில் மத அரசியல் செய்வது திமுக தான்.
ஆண்டுதோறும் கன்னியாகுமரியில் அரண்மனை கிறிஸ்துமஸ் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திமுக செல்லவில்லை. தவெக-வை அழைத்துள்ளதால் நாங்கள் பங்கேற்கவில்லை என்கின்றனர். பாஜக கிறிஸ்துமஸ், ஈகை பண்டிகை போன்ற அனைத்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகையில் தாக்குதல் நடத்தியதையும் கண்டிக்கிறோம். எனவே பாஜக மத அரசியல் செய்வதில்லை.
பாஜக படிப்படியாக தலைவர்கள் உழைத்து பாக முகவர்கள் எண்ணிக்கையை 63 ஆயிரமாக உயர்த்தியுள்ளனர். தேர்தல் ஆணைய இணையதளத்தில் 5,000 எண்ணிக்கை குறைவாக உள்ளது. தேமுதிக, அமமுக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மீதும் மரியாதை உள்ளது. யாரும் அவசரப்பட்டு எதுவும் பேச வேண்டிய கட்டாயம், அவசியம் இல்லை” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.