தமிழகம்

ஸ்டாலின் ‘கீ’ கொடுக்கும் பொம்மையாக இருக்கிறார்: அண்ணாமலை அதிரடி தாக்கு

செய்திப்பிரிவு

“முதல்வர் ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை மாதிரி. காலையில் ஒரு கீ கொடுத்தல் டில்லி என்றும், மதியம் ஒரு கீ கொடுத்தால் இந்தி என்றும், மாலையில் ஒரு கீ கொடுத்தால் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும் சொல்வார்” என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விடியல் எஸ்.சேகரை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு விடியல் வர வேண்டும் என்பதற்காக விடியல் சேகர் போட்டியிடுகிறார். அரசுப் பணியில் இருந்து 30 ஆண்டுகள் ஆகியிருந்தால் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் சக்கரபாணி, 30 ஆண்டுகளாக இத்தொகுதியில் எம்எல்ஏ-வாக உள்ளார்.

பொங்கல் தொகுப்பில் மிளகுக்குப் பதில் பருத்திக் கொட்டையையும், வெல்லத்தை தண்ணியாகவும் கொடுத்து ஊழல் செய்தவர் அமைச்சர் சக்கரபாணி. பொங்கல் தொகுப்பை விநியோகம் செய்த அமைச்சரின் பினாமியாக இருக்கக்கூடிய வீரா.சாமிநாதன் தான் வேடசந்தூர் தொகுதியின் வேட்பாளர். வேதாளம் முருங்கை மரம் ஏறினால் கூட 10 ஆண்டுகளில் கீழே இறங்கிவிடும். ஆனால், அமைச்சர் சக்கரபாணி 30 ஆண்டுகளாக இத்தொகுதியில் எம்எல்ஏ-வாக உள்ளார்.

ரேஷன் கடைகளில் வழங்க தமிழகத்துக்கு 2 லட்சம் டன் அரிசியை பிரதமர் மோடி வழங்குகிறார். 2023-ல் மட்டும் 916 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது. இது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணிக்கு வெட்கக்கேடு. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல் செய்த வழக்கு அமைச்சர் சக்கரபாணி மீது உள்ளது. மொத்தம் 13 அமைச்சர்கள் புழல் சிறைக்குச் செல்வார்கள். நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் ரூ.598-க்கு பதிலாக ஒரு லாரிக்கு ரூ.186 மட்டுமே கொடுத்து விட்டு, ரூ.412 வீதம் ஆண்டுக்கு ரூ.160 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை மாதிரி. காலையில் ஒரு கீ கொடுத்தால் டில்லி என்றும், மதியம் ஒரு கீ கொடுத்தால் இந்தி என்றும், மாலையில் ஒரு கீ கொடுத்தால் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும் சொல்வார். அவர் நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும். தொகுதி மறுவரையறை மூலம் எம்பி-க்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் குதிக்கிறார். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் மசோதா மூலம் பெண்கள் அதிக அளவில் எம்பி-க்கள் ஆகும் வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் டிஜபி, தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், முதல்வரையும் மக்கள் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பழநி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ரவி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். முன்னதாக, வேடசந்தூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரமசிவத்தை ஆதரித்தும் நேற்றுக் காலையில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT