அண்ணாமலை

 
தமிழகம்

“காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது ஏன்?” - அண்ணாமலை

தமிழினி

சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு ‘வி த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 16.02.2018 அன்று, உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினையின் பின்னணி:

முன்னதாக, ‘காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ல் அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடகா கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என கூறியுள்ளது மத்திய அரசுக்கு தெரியுமா? இதற்கு கர்நாடகா ஒப்புதல் பெற்றுள்ளதா? ஆகிய விவரங்களை ஜல்சக்தி அமைச்சர் தெரிவிக்க வேண்டும்’ என்று மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி, “காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பில்,காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெறவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

நடுவர் மன்றதீர்ப்பின் ஒரு பகுதியாக, காவிரிநீரை அந்தந்த மாநிலத்தில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், பலனை அனுபவிக்கவும், திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேகேதாட்டு அணையைப் பொருத்தவரை, திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது. அதுகுறித்த விரிவான அறிக்கையை தீர்ப்பாய ஒப்புதலோடு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் கர்நாடகா உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்து 9.19 டிஎம்சி. ஆனால் வந்தது 2.195 டிஎம்சி. ஜூலை மாதம் வர வேண்டியது 31.24 டிஎம்சி. ஆனால் வந்தது 0.459 டிஎம்சி” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT