விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு டீயும் காபியும் ஒன்றாக கலக்காது என அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான அவதூறு வழக்கில் சாட்சியம் அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பாஜகவுக்கும், எனக்கும் தொடர்பிருப்பதாக அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளித்துள்ளேன்.
மன்னிப்பு கேட்காததாலும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்காததாலும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நீதிமன்ற விசாரணையின் போது, என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு மீது இன்று புதிய அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாட்சியம் ஏப்ரல் 7-ம் தேதி அளிக்கப்படும்.
யார் மீதும் அவதூறு வழக்கு தொடரக்கூடாது என்ற கொள்கையில் இருந்தவன் நான். ஆனால், திமுகவின் எல்லையற்ற வன்மப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, என் வாழ்நாளில் முதல்முறையாக இந்த சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளேன். முதல்வரின் கண்ணீர் அவரது கட்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, அதிமுகவுக்காக அல்ல. ஐந்து ஆண்டு கால ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் படி எந்த சாதனையும் இல்லாததால், மக்களைத் திசைதிருப்ப முதல்வர் ‘நீலிக்கண்ணீர்’ வடிக்கிறார்.
“பாஜக அதிமுகவை விழுங்கிவிடும்” என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். “1999 முதல் 2003 வரை திமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோது திமுக விழுங்கப்பட்டதா? அல்லது தற்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக விழுங்கிவிடுமா?” மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது போல, விஜய் கட்சியுடன் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை எதுவுமில்லை. என்னை பொறுத்தவரை “டீயும் காபியும் ஒன்றாகக் கலக்காது”. ஏனென்றால், சித்தாந்தங்கள் வேறானவை. தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக உள்ளது.
மாநில செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கப்பட்டது குறித்துத் தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம். அவர் கட்சியின் மூத்த உறுப்பினர், அவருக்கு விரைவில் வேறு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.