அண்ணாமலை | கோப்புப்படம் 
தமிழகம்

10% வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க குழுவா? - அண்ணாமலை

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த தேர்தலுக்கு அளித்த 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க தனது தங்கையின் தலைமையில் குழு அமைப்பதா? என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் போராடும் நிலை திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார். ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள்.

கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதியாகக் கொடுத்து, போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக மக்களை திமுக எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT