கோவை: திமுகவின் தோல்வி கொங்கு மண்டலத்தில் தொடங்கி சேப்பாக்கத்தில் முடியும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜக தேசிய தலைவரை நேற்று சந்தித்தேன். தமிழ்நாட்டின் பிரச்சார சூழல், புதுச்சேரி, கேரளா பிரச்சாரம் எப்படி செல்கிறது என ரிப்போர்ட் கொடுக்க வேண்டியிருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ், திமுக வேறு வேறு சூழலில், பெண்களுக்கான ரிசர்வேஷன் கோட்டாவை கொண்டு வருகிறோம் என சொல்லிக் கொண்டே இருந்தனர். ஆனால், பிரதமர் அதை இரு அவைகளிலும் கொண்டு வந்துள்ளார். அதற்கான சிறப்புக் கூட்டம் வரும் 16,17,18-ம் தேதிகளில் நடக்கிறது. இதில் தமிழக எம்.பி.க்கள் நிச்சயம் பங்கேற்று, ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால், முதல்வர் இப்பொழுது அதற்கு எதிர்ப்பு சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
ரஜினிகாந்த் சிறந்த மனிதர்:
நடிகர்கள் பின்னால் ரசிகர்கள் செல்லக் கூடாது என ரஜினிகாந்த் எந்த பொருளில் கூறினார் எனத் தெரியவில்லை. ரஜினிகாந்த் பெரிய நடிகர், பண்பாளர், சிறந்த மனிதர். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள சூழலில் எல்லா தலைவர்களும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்த 15, 20 நாட்கள் எல்லோரும் தரத்தோடு விமர்சனம் வைக்க வேண்டும். பேசக் கூடிய வார்த்தைகளை, வாக்களிக்கும் போது நியாபகம் வைத்துதான் மக்கள் வாக்களிப்பார்கள். எங்கள் என்டிஏ கூட்டணி தரமான கூட்டணி.
திமுகவின் தோல்வி:
கோவை தெற்குத் தொகுதியில் செந்தில் பாலாஜி கரூரில் இருந்து இறக்கிய 18 சுயேச்சைகளுக்கும் ஒரே நபர் தான் நோட்டரி கொடுத்துள்ளார். வேறு ஆள் கிடைக்கவில்லையா? இந்த முறை கோவை தெற்கில் செந்தில் பாலாஜி தோல்வி மட்டுமல்ல, திமுக ஒட்டுமொத்த தோல்வியும் கொங்கு மண்டலத்தில் தொடங்கும். முதல்வர் ஸ்டாலின், கொங்கு மண்டலத்திலிருந்து வெற்றி தொடங்கும் என்கிறார். திமுகவின் தோல்வி கொங்கு மண்டலத்திலிருந்து தொடங்கி சேப்பாக்கத்தில் முடியும்.
எடப்பாடி தொகுதியில் விதிகளை மீறிய திமுக வேட்பாளரின் மனுவை நிராகரித்து இருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் தலையிட்டு மனுவை ஏற்க வைத்துள்ளனர். சேப்பாக்கத்தில் உதயநிதி தனது மனுவில் எங்கெல்லாம் முதலீடு உள்ளது என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், ஏற்கப்பட்டுள்ளது. திமுகவின் தோல்வி வேட்பாளர்கள் பரிசீலனையிலேயே தொடங்கி விட்டது. பல இடங்களில், மேனேஜ் செய்துதான் அவர்கள் வேட்பு மனுவையே உள்ளே கொண்டு சென்றுள்ளனர். அரசு அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் செந்தில் பாலாஜி யாருக்கு அட்வைஸ் செய்கிறார்.
முதல்வர் வேட்பாளர் தினமும் களத்தில் இருக்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், தினமும் தொகுதியில் பேச வேண்டும் என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும். தேர்தல் சூழலில், இன்னும் சில பேரை காணவில்லை. ட்விட்டரிலும், அறிக்கையிலும் தான் அவர்கள் உள்ளனர். களத்துக்கு வந்து மக்களை சந்தித்து கருத்துகளை முன் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதை கட்சியின் மூத்த தலைவர்கள் அறிவிப்பார்கள். புதுச்சேரியில் ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம் செய்துள்ளனர். ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. ராகுல் காந்தி திமுக பெயரையோ, ஸ்டாலின் பெயரையோ தெரிவிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினும் ராகுல் காந்தி பெயரை தெரிவிக்கவில்லை.
இண்டியா கூட்டணியில் ஒற்றுமையில்லை:
எனவே, தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. திமுக ஜெயிக்கக் கூடாது என ராகுல் காந்தி விரும்புகிறரா என்ற கேள்வி உள்ளது. இண்டியா கூட்டணியில் அவர்களுக்கு இடையே ஒற்றுமையில்லை. விஜய் பிரச்சாரங்களுக்கு முறையாக அனுமதி கொடுக்க வேண்டும். கூட்டம் சேர்வதால் அனுமதி தர முடியாது என்பதை அரசியலில் ஏற்க முடியாது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. அனுமதி மறுப்பது நல்ல போக்கல்ல. திமுகவினர் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தேர்தல் ஆணையத்தினர் தடுக்க வேண்டும்” என்றார் அவர் கூறினார்.