திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அலகுமலையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் அண்ணாமலை பங்கேற்று ஓடினார்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் வலிமை மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அவிநாசியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தொடங்கி வைத்து, ஓட்டம் முழுவதும் பங்கேற்றார். போட்டியில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 9,300 பேர் கலந்து கொண்டு ஓடினார்.
அவிநாசி தேவராயன்பாளையம் பிரிவில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மங்கலம் செல்லும் புறவழிச்சாலை, அவிநாசி கிழக்கு வீதி, புதிய பேருந்து நிலையம், திருப்பூர் சாலை வழியாக அவிநாசி புறவழிச்சாலையில் நிறைவடைந்தது. 10 கிமீ, 6 கிமீ, 3 கிமீ, ஒரு கிமீ என 4 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல, திருப்பூர் அலகுமலையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தையும் அண்ணாமலை தொடங்கிவைத்தார். சாதனை பெண்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.