சென்னை: அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழகம்முழுவதும் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதம் முழுவதும் ‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல்’ எனும் கருப்பொருளுடன் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதன் முதல் நிகழ்வாக, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ‘காமராஜர் விருது' வழங்கி அண்ணாமலை கவுரவித்தார். அதேபோல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார்.
அதன்படி, தேர்தலில் களம் காண விரும்புபவர்களுக்குச் சரியான வழிகாட்டல் மற்றும் அரசியல் பயிற்சிகளை வழங்குவதற்காக, கோவையில் அக்.15-ம் தேதி ‘அப்துல் கலாம் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம்’ என்ற அரசியல் பயிற்சி மையத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து, அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ‘‘அக்.15-ம் தேதி, அப்துல் கலாம் பிறந்த நாளன்று, கோவையில், ‘அப்துல் கலாம் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம்’ தொடங்கப்படும். முதல் நாளில், இந்த பயிற்சித் திட்டத்தில் 100 மகளிர் இணைவார்கள்.
மேலும், 3-வது வாரத்தில், ‘வீ த லீடர்ஸ்’ தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் பெண்களைக் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழு பதிவு செய்யப்பட உள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக் காக நாம் தொடர்ந்து துணை நிற்போம்’’ என்று கூறியுள்ளார்.