அண்ணாமலை
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகரனை ஆதரித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் இன்று இரவு பிரச்சாரம் செய்து பேசியதாவது: ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏவான பழனியாண்டியால் இந்த தொகுதி மக்களுக்கு பெரும் தலைகுனிவு. கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறி கல்குவாரியில் அதிகமான கனிமவளங்களை கொள்ளையடித்துள்ளார். அதை படம் பிடிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை தாக்கி, ஊடகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி தலைகுனிவை ஏற்படுத்தினார்.
அவரது கட்சியை சேர்ந்த திருச்சி சிவா வீட்டை அடித்து நொறுக்கினார். திமுக எம்எல்ஏவாக இருக்க சில தகுதிகள் வேண்டும். அதன்படி கொள்ளையடிக்க வேண்டும், ரவுடித்தனம் செய்ய வேண்டும், மக்களை அச்சுறுத்த வேண்டும்.இதையெல்லாம் பக்காவாக செய்தும் கூட பழனியாண்டிக்கு திமுக சீட் கொடுக்காதது ஆச்சர்யம்.
திமுக வேட்பாளராக இருக்க வேண்டிய அனைத்து தகுதியும் அவருக்கு இருந்தது. இந்த முறை யார் நின்றாலும் வெற்றி பெறப் போவதில்லை எனத் தெரிந்து சப்ஸ்டிட்யூட் பிளேயராக துரைராஜை இறக்கி உள்ளனர். பழனியாண்டியின் சட்டையாக இருக்கும் துரைராஜை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். பிரதமர் மோடி மக்களவையில் கொண்டு வந்த மகளிர் மசோதாவை காங்கிரஸ், திமுக கூட்டணியினர் தோற்கடித்தனர். மோடி ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதை செய்தே தீருவார். அதை விடமாட்டார்.
2029-ல் மகளிருக்கு 33 சதவீதம் வருவது உறுதி. இது அரசியல் களையெடுக்கும் தேர்தல் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. இவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் இருந்தால் தமிழகம் தாங்காது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரக்கூடாது. திமுக கூட்டணி கோயில் சிதறு தேங்காய் போல சிதறிக்கிடக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா பேசும்போது, ஸ்டாலின் நல்லவர் தான். ஆனால் பாலியல் தொல்லை, கஞ்சா பிரச்சினை தான் உள்ளது. ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவில்லை. ராகுல் வடக்கே, ஸ்டாலின் தெற்கே பிரச்சாரம் செய்தனர்” என்றார்.