தமிழகம்

“பிடிஆரின் 20 நிமிட ஆடியோவை வெளியிட்டால் மிகப்பெரிய அரசியல் பிரச்சினை ஏற்படும்” - அண்ணாமலை

கி.மகாராஜன்

மதுரை: அமைச்சர் பிடிஆரின் 30 நிமிட ஆடியோ பேச்சின் 10 நிமிட பேச்சு தான் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்படாத 20 நிமிட பேச்சையும் வெளியிட்டால் மிகப்பெரிய அரசியல் பிரச்சினை ஏற்படும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.

மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி-யை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை  இன்று பிரச்சாரம் செய்தார். 

          

அப்போது அவர் பேசியதாவது: மதுரை மத்திய தொகுதியில்  திமுக வேட்பாளராக போட்டியிடும் பிடிஆர் மிராசுதாரர், ஜாமீன்தார், முதலாளி போல் உள்ளார். இவரது கைத்தடி, அடியாள் தான் பொன் வசந்த். இவர் தான் மதுரை மேயரின் கணவர். மதுரைக்கு இப்போது மேயர் இல்லை. சொத்து வரி முறைகேடு காரணமாக மேயர் ராஜினாமா செய்தார். 

பொன் வசந்த் சொத்து வரியை உயர்த்தாமல் இருக்க பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். சாமானியர்களுக்கு சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். பெரிய முதலாளிகளுக்கு ஏற்றவில்லை. இதற்காக பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் கைதானால் 6 மாதம் ஒரு ஆண்டு சிறையில் இருப்பார்கள். பொன் வசந்த் ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார். அக்டோபரில் வெளியே வந்தார்.

இப்போது சுந்தர்.சி வெளியூரில் இருந்து வந்ததாக பிடிஆர் பிரச்சாரம் செய்கிறார். வெளியூரில் இருந்து வந்த ஒருவர் மதுரைக்காரர் என்றால் பெருமைப்பட வேண்டும். பழனிவேல் தியாகராஜன் தந்தை மிகப்பெரிய மனிதர். மதுரைக்கு நிறைய செய்துள்ளார். அவரை குறை சொல்ல மாட்டோம். நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் போது அமெரிக்காகாரர் என்று தானே சொன்னீங்க. அப்போது அமெரிக்ககாரர். அரசியலுக்காக மதுரை வந்தால் மதுரைக்காரர் என்பதா? மதுரை மக்களுக்கு சேவையாற்ற வந்தால் வெளியூர்காரரா?

பிடிஆருக்கு கடந்த 2 நாளாக மனம் சமமாக இல்லை. பாதி நேரம் ட்விட்டரில் இருக்கிறார். மதுரை மத்திய தொகுதியில் மாற்றம் வரப்போகிறது என்று சொன்ன பத்திரிகையாளர்களை திட்டியுள்ளார். குஷ்புவை வம்பிழுக்கிறார். உதயநிதி நள்ளிரவு வரை இன்ஸ்டாகிராமில் இருக்கிறார். முழு நேரமும் ட்விட்டரில் இருக்காமல் வீடு வீடாக சென்று ஓட்டு கேளுங்கள்.

எந்த கேள்வி கேட்டாலும் அகங்காரமாகத் தான் பிடிஆர் பதிலளிப்பார். எதாவது கேட்டால் நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என் குடும்பம் யார் தெரியுமா? இதேபோல் ஸ்டாலினும், நான் யார் தெரியுமா? முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். அதையா நாங்கள் கேட்டோம். மதுரைக்கு 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்றால் பதில் சொல்வதில்லை.

பிடிஆரின் உதவியாளர்கள் இலக்குவன், ஜெய்பாலாஜி. பல கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட ஜெய்பாலாஜி இப்போது சிறையில் உள்ளார். இலக்குவன் வெளிநாட்டில் உள்ளார். இவர்களை உடன் வைத்துக்கொண்டு சுத்தத்தை பற்றி பேசுகிறார். முதலில் உங்கள் வீட்டில் உள்ள அழுக்கை சுத்தம் செய்து விட்டு சுந்தர்.சி-யை பேசுங்கள்.

மீனாட்சியம்மன் கோயிலின் பரம்பரை அறங்காவலர் உங்கள் குடும்பம் தான். மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் பாதை சரியாக இல்லை என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் நான் யார் தெரியுமா? எனக் கேட்டால் எப்படி. பிடிஆரின் தந்தை நல்லவர். அதற்காக இரு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்துள்ளீர்கள். இது போதும். இந்த முறை மாற்றம் வர வேண்டும்.

மாநில அரசு கோவைக்கு மட்டும் தான் மெட்ரோ ரயில் கேட்டது. மதுரைக்கு உறுதியாக கேட்கவில்லை. பட்டும் படாமல் மதுரைக்கு கேட்டுள்ளனர். அதிலும் மதுரையில் மெட்ரோ ரயில் சாத்தியமில்லை. பேருந்துகள் மட்டும் செல்லும் திட்டத்தை கேட்டுள்ளனர். மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருத்தி  பழனிசாமி முதல்வரானதும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும். 

குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் ஏற்பாடு செய்யப்படும். குழப்பத்துடன் கடிதம் அனுப்பிவிட்டு மத்திய அரசு கேட்ட விளக்கத்தை 5 மாதமாக கொடுக்காமல் மத்திய அரசு தர மறுத்ததாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை தே.ஜ கூட்டணியால் தான் முடியும். இவர்களால் ஒரு துரும்பை கூட கிள்ளி போட முடியாது.

பிடிஆர் பேசும்போது மதுரைக்கு செய்ய நினைத்தை என்னால் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது என்று சொல்லியுள்ளார். அப்போது எதற்கு எம்எல்ஏவாக இருக்க வேண்டும்? திமுகவில் ஏன் இருக்க வேண்டும்? பிடிஆர் நிதி அமைச்சராக நன்றாக தான் இருந்தார். நானும் ஒரு சின்ன தவறு செய்துவிட்டேன். இவர் பேசிய ஆடியோவை லீக் செய்து விட்டேன். அந்த ஆடியோவில் 30 நிமிடம் பேசுகிறார். நான் 10 நிமிடம் பேசியதை மட்டும் தான் வெளியிட்டேன். இன்னும் 20 நிமிடம் இருக்கிறது. அதை வெளியிட்டால் பெரிய அரசியல் பிரச்சினை வந்துவிடும். 

அதில் திமுகவில் பையனும், மருமகனும் ரூ.30 ஆயிரம் சம்பாதித்துவிட்டார் என நண்பரிடம் பேசுகிறார். அதன் பிறகு தான் நிதி அமைச்சர் பதிவியில் இருந்து தூக்கப்பட்டார். அதன் பிறகு தான் புலம்பலை ஆரம்பித்துள்ளார். உங்களால் எதையும் செய்ய முடியவில்லை என்றால் எதற்கு திமுகவில் இருக்கிறீர்கள்? உங்களின் உதவியாளர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். எதற்கு நேர்மை என்று பேசுகிறீர்கள். 

அமெரிக்காவில் பணிபுரிந்த கம்பெனிகளை திவாலாக்கிவிட்டு மதுரையை திவாலாக்க வந்திருக்கிறார்கள். உதயநிதி பொய்யாக பேசுகிறார். தூங்கும் போது வரும் கனவை உண்மை என நினைத்து பேசுகிறார்கள்.

வளைகுடா போர் காரணமாக காஸ் தட்டுப்பாடு. இந்த தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், இலங்கையில் பெட்ரோல் விலை கடுமையாக ஏற்றப்பட்டுள்ளது. இங்கு விலையை ஏற்றாமல் நிலையை சமாளிக்கப்படுகிறது. கனிமொழி சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதாக பொய் சொல்கிறார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்துக்கு மத்திய அரசு காரணம் அல்ல. திமுக அரசு தான் காரணம். அக்டோபர் 2026ல் எய்ம்ஸ் திறக்கப்படும். டெல்லிக்கு வெளியே இருக்கும் எய்ம்ஸ் மதுரை எய்ம்ஸ். இவர்கள் செய்த தாமத்தால் எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது. அதையும் மோடி அரசு வழங்க தயாராக உள்ளது. எய்ம்ஸ் வந்துவிடும், மெட்ரோ ரயில் வந்துவிடும். இதனால் தே.ஜ.கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

 நமக்கு இரண்டு வாட்ச் கட்டுகிறவர்கள் வேண்டாம். அதட்டி, உருட்டி பேசுபவர்கள், மிராசுதாரர்கள் தோரணையில் இருப்பவர்கள் வேண்டாம். பழைய நீதிக்கட்சி வாரிசை தோற்கடிக்க வந்திருக்கும் புதிய நீதிக் கட்சியின் வாரிசாக சுந்தர்.சி உள்ளார். அவரை வெற்றி பெற வையுங்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் பிடிஆர் ஆகியோருடன் இருக்கும் போட்டோவையும், அமைச்சர் பிடிஆர் அவரது முன்னாள் உதவியாளர்கள் இருவருடன் இருக்கும் புகைப்படத்தையும் காட்டி அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

பின்னர் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா, மதுரை மேற்கு அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ, மதுரை தெற்கு பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்

SCROLL FOR NEXT