திருப்பத்தூரில் பாஜக வேட்பாளர் கே.சி.திருமாறனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அண்ணாமலைக்கு வேல் பரிசளிக்கப்பட்டது.
திமுகவினர் டிசைன் டிசைனாக பொய் பேசுவதில் வல்லவர்கள் என்று பாஜக முன்னாள் தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் திருப்பத்தூரில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. ஏராளமான குற்றங்கள் நடக்கும் தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக இருக்க முடியும்? இந்தத் தேர்தல், பிடித்த வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கான தேர்தல் இல்லை. ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல்.தமிழகத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 17லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மாற்றத்துக்காக வாக்குகளைச் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. திமுக ரவுடி கட்சியாக மாறிவிட்டது. நான் கொடுத்த வாக்குறுதிகளை மறுக்கவும் மாட்டேன்; மறக்கவும் மாட்டேன் என்கிறார் ஸ்டாலின். அதை எப்போது நிறைவேற்றப் போகிறார் எனறு தெரியவில்லை.வாக்குறுதிகளில் 15 சதவீதம்தான் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.
அவருக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார் நல்லவர்தான். மாணவன் தான் மக்கு. அதேபோல் தான் கனிமொழியும் புளுகு மூட்டையாக மாறிவிட்டார். திமுககாரர்கள் டிசைன், டிசைனாக பொய் பேசுவதில் வல்லவர்கள். வீடுதோறும் குடிநீர் திட்டத்துக்காக மத்தியஅரசு ரூ.4,835 கோடி ஒதுக்கியது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் நாட்டாகுடி கிராமமே காலியாகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.