சென்னை: ‘கோவை தெற்கு தொகுதியில் மட்டும் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.200 கோடி செலவு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி’ என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. இதற்கு சாட்சியாகத் திருவண்ணாமலையில் 11-ம் வகுப்பு மாணவிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அமைந்துள்ளது. இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை, வழக்கும் பதியவில்லை.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் சப்ளை செய்யும் அளவுக்கு அதிகார மையங்களுடன் நெருக்கமாக உள்ளது. தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமே குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் ‘அரசியல் பாதுகாப்பு’ தான். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2,080 பாலியல் வழக்குகள், 8,008 கொலைகள், 40 ஆயிரம் போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆனால் திமுக கூட்டணியோ, கோயிலுக்கு வெளியே சிதறிக் கிடக்கும் தேங்காயைப் போல சிதறிப் போயுள்ளது. கோவையில் செந்தில் பாலாஜியின் ஆட்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம், சுமார் 200 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கில் அவர் மீண்டும் சிறைக்குச் செல்வது உறுதி.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியைத் தீவிரவாதி என்று விமர்சித்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தக் கருத்தில் உடன் பாடு உண்டா? தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, ஒருபோதும் குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.