தமிழகம்

திருப்பூரில் அண்ணாமலை கைது - தடையை மீறி போராட முயன்றதால் நடவடிக்கை

வெற்றி மயிலோன்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்னகாளி பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சி சின்னகாளி பாளையம் பகுதியில் மாநகராட்சியின் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் குப்பை லாரிகளை சிறைப்பிடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டிக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார்.

ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதியளிக்காததால், காரில் இருந்தவாறே அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்றதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். அண்ணாமலை கைது செய்யப்பட்டவுடன் அப்பகுதியில் பாஜகவினர் காவல் துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்தது என்ன? - திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்ன காளிபாளையம் பகுதியில் கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்களை பொதுமக்கள் நேற்று முன் தினம் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்து றையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை குண்டுகட்டாக கைது செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் மீது போலீஸாரைத் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT