சென்னை: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் 12,525 கிராமங்களிலும் ஆக.15-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அடிப்படை மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு ‘மாறுவோம் மாற்றுவோம்' என்ற முழக்கத்தோடு செயல்படும் ‘வீ த லீடர்ஸ்' தொண்டர்கள், தங்கள் ஊர்களில் நடைபெறும் இந்த கூட்டங்களில் பங்கேற்பது மிகவும் அவசியம்.
குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின சகோதர சகோதரிகளை அதிக அளவில் இந்தக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இதில் மக்கள் தங்கள் ஊரின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பேசலாம். அந்தப் பிரச்சினைகளைத் தீர்மானங்களாகக் கொண்டுவந்து அரசுக்கு அனுப்ப முயற்சி எடுக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 50 முதல் 300 பேர் வரை (ஊராட்சியின் அளவைப் பொறுத்து) பங்கேற்றால் மட்டுமே தீர்மானம் சட்டப்பூர்வமாகும் என்பதால், மக்களை அதிக எண்ணிக்கையில் திரட்ட வேண்டும்.
பிரதமர் மோடியின் வேண்டு கோளுக்கிணங்க, தேசப்பற்றுடன் நமது வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி ‘ஹர் கர் திரங்கா' இயக்கத்தைக் கொண்டாட வேண்டும். இந்த கிராமசபைக் கூட்டங்கள் மூலமாக கிராமப் புறங்களில் புதிய மாற்றத்தை உருவாக்க உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.