சென்னை: ‘அரசியல் நடவடிக்கைகள் ஜூலை முதல் தொடங்கும்’ என ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நாம் அனைவரும் ஒரு குடும்பமாக ‘வீ தி லீடர்ஸில்’ இணைந்திருக்கிறோம்.
ஒரு மாற்றத்தை நோக்கி செல்கிறோம்; அந்த மாற்றத்தை நாம் அடிப்படையிலிருந்து ஆரம்பித்திருக்கிறோம். மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து நாம் பேச வேண்டும்.
எந்தக் கட்சிகளும் இதுபற்றி பேசுவது கிடையாது. இந்த இயக்கம் கட்சியாக மாறினால் இதன் தன்மை வேறு மாதிரி இருக்கும். தற்போது வரை சுமார் 18 லட்சம் பேர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இணைந்துள்ளனர்.
ஓடிபி அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்க்கும் ஒரே இயக்கம் ‘வீ தி லீடர்ஸ்’. ஜூலை முதல் அரசியல் நடவடிக்கைகள் தொடங்கும். நமக்கு பாஸிடிவ் அரசியல்தான் தேவை.
‘வீ திலீடர்ஸ்’ வெப்சைட் வெளிப்படை தன்மையுடன் இருக்கும். அதில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தவுடன், நாம் அரசியலுக்கு வரவேண்டுமா? என மக்களிடம் கருத்து கேட்போம். அதுவரை நாம் இலக்குடன் செயல்படுவோம்.
70 ஆயிரம் பேர் தாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்துகள் எப்படி செயல்படுகிறது? மற்றும் கிராமங்கள், நகரங்கள் குறித்த பல்வேறு அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு இது சம்பந்தமாக எதுவுமே தெரியாமல், அவர்களை எப்படி தேர்தலில் நிற்க வைக்க முடியும். அவர்கள் எப்படி மக்களுக்கு உதவி செய்வார்கள்? ‘நான் இந்த ரசிகர் மன்றத்தில் இருந்தேன்; இன்று காலையில் சீட் கொடுத்தார்கள் எம்எல்ஏ ஆகிவிட்டேன், எம்.பி ஆகிவிட்டேன்’ என்ற நிலை தற்போது இருக்கிறது.
நான் யாரையும் இதன்மூலம் குறை சொல்ல விரும்ப வில்லை. ‘வீ தி லீடர்ஸ்’ மூலம் உறுப்பினர்களுக்கு முறையான வழிகாட்டுதல் கொடுக்கப்படும்.
ஒருவரே 50 வருடம் எம்.பி, எம்எல்ஏவாக இருப்பது ஆகியவற்றை உடைக்க வேண்டும். நமது அரசியல், நாளைய மாற்றத்துக்கான அரசியல். அறம் சார்ந்த அரசியல் மற்றும் வாழ்க்கை முறையைக்கொண்டு வருவோம்; அது பெரியமாற்றத்தைக் கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.