சென்னை: தமிழகத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து கூறுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: அண்ணாமலை: தமிழக அரசின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டது திமுக அரசு. கடந்த 2021-ம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் 1,686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால் உள்துறை செயலாளர் நேற்று கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குகள் எண்ணிக்கை 1,597 என்று குறைத்து கூறியிருந்தார். திமுக அரசு தானே சமர்ப்பித்து, தேசிய அளவில் வெளியிடப்பட்ட 2021 புள்ளிவிவரங்களில் இப்படித் தவறான எண்ணிக்கையைக் கூறும்போது, இதுவரை சமர்ப்பிக்காமல் திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக் கான புள்ளி விவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்?
இந்த முக்கியமான விஷயங் களில் பதில் சொல்ல வேண்டியது அதிகாரிகள் அல்ல, உள்துறை மற்றும் காவல்துறைகளை நேரடியாகக் கையாளும் முதல்வர் ஸ்டாலின்தான்.
அன்புமணி: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் வெளியான குற்றங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த 3 ஆண்டுகளிலுமே முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளுடன் ஒப்பிட்டால் எண்ணிக்கை அதிகரித்திருக் கிறதே தவிர குறையவில்லை. பொய்யான புள்ளி விவரங்களைக் கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்