சென்னை: பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிபதியின் தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால், நியாயப்படி தர்காதான் முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், கோயில் செயல் அலுவலர் முறையீடு செய்திருக்கிறார்.
அவரை, திமுக தூண்டி விட்டிருக்கிறது. காவல் துறை தங்கள் கடமையை சரிவர செய்யாததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை திருப்பரங்குன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர்களை நீதிபதி அனுப்பியதில் எந்தத் தவறும் இல்லை.
2005-ம் ஆண்டில் நடந்த அமைதிக் குழு பேச்சுவார்த்தையின்போது, தர்கா இருக்கும் இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றலாம் என முஸ்லிம்கள் கையெழுத்திட்ட ஆவணம் இருக்கிறது.
எனவே, தீபம் ஏற்றுவதில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. திருப்பரங்குன்றம் மலைக்கு சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்ததையும், ராமநாதபுரம் எம்.பி. சிக்கன் பிரியாணி சாப்பிட்டதையும், நெல்லித்தோப்பில் ஆடு வெட்டுவோம், கோழி வெட்டுவோம் என்று கூறுவதையும் திமுக அரசு ரசிக்கிறது.
பக்தர்களுக்கு எதிராக திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 161-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டதால் சில கோயில்களை இடித்தோம் என்கிறார்கள்.
இடித்து அப்புறப்படுத்துவதற்கு மட்டும் நீதிமன்றம் வேண்டுமாம். தீபத்தூணில் தீபம் ஏற்றுங்கள் என்றால், நீதிமன்றம் கூறுவதைக் கேட்க மாட்டார்களாம்.
இதுவரை எத்தனை தேவாலயங்கள், மசூதிகளை இடித்திருக்கிறார்கள்? முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது... அரசியலா என்று பதிவிட்டிருக்கிறார். ஒரு முதல்வர் போடும் பதிவா இது? திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற பாஜக தொண்டர்கள் உயிரைக் கொடுத்து துணை நிற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.