சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை: திமுக ஃபைல்ஸ் விவகாரத்தில் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம், அண்ணாமலை 3 மணி நேரமாக குறுக்கு விசாரணை நடத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குறித்தும் காரசார விவாதம் நடந்தது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரது சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியிட்டார். அதில் குறிப்பாக திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர். பாலு மற்றும் அவரது மகனும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமாக 21 நிறுவனங்கள் உள்ளதாகவும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக டி,ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் செந்தில்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகியிருந்த டி.ஆர்.பாலுவிடம், அண்ணாமலை 3 மணி நேரமாக குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது டி.ஆர்.பாலுவிடம், சேது சமுத்திர திட்டத்தின் பெயரில் ஊழல் செய்தது, சொந்தமாக கப்பல்கள் வாங்கியது. தனியார் நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியது. அவருக்குச் சொந்தமான 18 சொகுசு கார்கள், மகன் நடத்தும் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலை தொடர்பாக அண்ணாமலை கேள்விகளை எழுப்பி, அதுதொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
அப்போது டி.ஆர்.பாலு சில கேள்விகளுக்கு தெரியாது என்றும், பல கேள்விகளுக்கு சரியல்ல என்றும் பதிலளித்தார். சாராய ஆலை தொடர்பான கேள்விக்கு அது ரசாயண ஆலை என்றும், தான் அதில் ஒரு பங்குதாரர் மட்டுமே என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்தார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த காரசார வாதம் வருமாறு:
அண்ணாமலை: சேது சமுத்திர திட்டம் மூலமாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 10 கப்பல்களை நீங்கள் வாங்கி ஊழல் செய்துள்ளதாக அழகிரி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளாரே. அது உண்மையா, அழகிரி கூறியது தவறு என்றால் அதற்காக அவர் மீது ஏன் அவதூறு வழக்கு தொடரவில்லை என்றார்.
டி.ஆர்.பாலு: அழகிரிக்கோ, உங்களுக்கோ சேது சமுத்திர திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை. சேது சமுத்திர திட்டம் தமிழகத்தின் 150 ஆண்டுகால கனவுத்திட்டம். அதற்கும் கப்பல்கள் வாங்கியதற்கும் என்ன சம்பந்தம்?
அண்ணாமலை: அப்படி என்றால் அழகிரி உங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் பேட்டி கொடுத்தாரா?
டிஆர் பாலு: அழகிரி உள்நோக்கத்துடன் பேட்டி கொடுத்ததாக நான் கருதவில்லை. ஒருவேளை அழகிரி பேசியதை திரித்து கூறியிருக்கலாம். திட்டம் குறித்து சரியாமல் புரிந்து கொள்ளாமல் குற்றம் சாட்டக்கூடாது. நான் 10 கப்பல்களை வாங்கவில்லை. 2 மீன்பிடி கப்பல்களைத் தான் வாங்கியுள்ளேன். உண்மை தெரியாமல் ‘அரை வேக்காட்டுத்தனமாக’ பேசினால் அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது. அதை வைத்துக்கொண்டு ‘அரைவேக்காட்டுத்தனமாக’ கேள்விகள் கேட்பதை ஏற்க முடியாது.
அண்ணாமலை: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டின் காரணமாகவே 2009-ல் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என அழகிரி கூறியுள்ளார். நீங்கள் கப்பல்கள் வாங்கியுள்ளதாக அழகிரி மட்டுமல்ல சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதா போன்றவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீதும் ஏன் வழக்கு தொடரவில்லை. ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.9-ஐ ஏன் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர் என உங்களுக்குத் தெரியுமா?.
டி.ஆர்.பாலு: எனக்கு ஏன் அமைச்சர் பதவி தரவில்லை என்பது குறித்து அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தான் கேட்க வேண்டும். ஜெயலலிதாவின் அறியாமையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வடசேரி கிராம மக்கள் கருப்பு தினம் அனுசரிப்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. அது நான் மட்டுமே சார்ந்த பிரச்சினை அல்ல. நீங்கள் கூட (அண்ணாமலையிடம்) ரூ. 5 லட்சம் மதிப்பில் கைக்கடிகாரம் அணிந்து கொண்டு, உங்கள் மனைவியின் பெயரில் சொத்துகளை வாங்கி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதால்தான் உங்களது மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது உண்மையா?
அண்ணாமலை: என் மனைவி என்ன படித்துள்ளார். எவ்வளவு சம்பாதிக்கிறார். எந்த முன்னணி எம்என்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நாங்கள் இருவரும் அந்த விவசாய நிலத்தை வாங்க வருமான வரி செலுத்தி இருக்கிறோம் என்பதும், அதற்காக ரூ. 2.50 கோடி கடன் பெற்றுள்ளோம் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
டிஆர் பாலு: அதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
அண்ணாமலை: இன்று நீங்கள் நீதிமன்றத்துக்கு வரபயன்படுத்திய சொகுசு வால்வோ கார் உங்கள் மகனின் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலைக்குச் சொந்தமானது என்பது சரியா?
டி.ஆர்.பாலு: பொதுவாக நான் எங்கு சென்றாலும் பயன்படுத்தும் கார் எந்த வகை என்பதை கவனிப்பதில்லை. குடும்பத்தினர் ஏற்பாடு செய்யும் கார்களில் பயணிப்பேன். அவ்வளவுதான்.
அண்ணாமலை: பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள என் மீதும், எனது மனைவி மீதும் அபாண்டமாக, உள்நோக்கத்துடன் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதற்காக உங்கள் (டி.ஆர்.பாலு) மீது புதிதாக அவதூறு வழக்கு ஒன்றைத் தொடருவேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
இந்த குறுக்கு விசாரணை நேற்று நிறைவடையாததால் வழக்கை நீதிபதி வரும் ஏப்.7-க்கு தள்ளி வைத்தார். அன்றைய தினமும் டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல அண்ணாமலை மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் மார்ச் 10-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்ஸன் வில்சனும், அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஏ.குமரகுரு ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.