சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப். 3-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் அண்ணாவின் 57-வது நினைவு தினம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் பிப்.3-ம் தேதி காலை 10 மணிக்கு அனுசரிக்கப்படுகிறது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தவுள்ளார். தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.