சென்னை: கீரப்பாக்கம் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையை அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் கீரப்பாக்கம் கிராமத்தில் குப்பை எரி உலைத் திட்டத்தையும், அதனுடன் இணைந்த நிலம் நிரப்பு திட்டத்தையும் செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளது.
புற்றுநோய் உள்ளிட்ட ஏராளமான நோய்களை ஏற்படுத்தும் குப்பை எரி உலைத் திட்டங்களை எதிர்ப்பையும் மீறி ஸ்டாலின் அரசு செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
மேலை நாடுகளில் குப்பை எரி உலைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தீமைகள் இருந்தும் கூட குப்பை எரிஉலைகளை அமைக்க திமுக அரசு துடிப்பதன் நோக்கம், அதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் பல கோடி ரூபாய் கையூட்டும், இன்னும் பல வெகுமதிகளும் தான்.
புற்றுநோய் உள்ளிட்ட ஏராளமான நோய்களை ஏற்படுத்தும் குப்பை எரி உலைகளை அமைக்க துடிப்பதை மன்னிக்க முடியாது. எனவே, கீரப்பாக்கத்தில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
அதேபோல், சென்னை, கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டம், பெருங்குடி எரி உலை திட்டம் ஆகியவற்றையும் கைவிட்டு,
உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், திடக் கழிவுகளை வகைப் பிரித்து மேலாண்மை செய்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
குறிப்பாக, பூஜ்ஜிய குப்பை எனப்படும் குப்பையில்லா நகரங்கள் கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப் பெரிய அளவிலான அறப்போராட்டத்தை பாமக நடத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.