சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க ஆணையம் மறுத்துவிட்டது.
கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்றைய நிலவரப்படி 60.21 டிஎம்சி நீர் உள்ளது. இதில் குறைந்தபட்சமாக 23 டிஎம்சி போக, பெங்களூரு குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக்கொண்டாலும் மீதமுள்ள 32 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியும்.
இந்த உண்மைகள் தெரிந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிடாததற்கு காரணம், அதை செயல்படுத்த வைக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லாததுதான்.
காவிரியில் தமிழகத்துக்கான உரிமைகளைப் பெற வேண்டுமானால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரி குறுக்கே இரு மாநிலங்களிலும் கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரம் கொண்ட பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று புதிய காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு. இதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.