சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பில் சாதி பட்டியலை இணைத்து தேர்வு செய்யும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் 16 மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதிகளை குறிப்பிடுவதற்கான இடம் காலியாக விடப்பட்டு, அதில் சாதியின் பெயரை எழுதும் முறை கடைபிடிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.
தோல்வியடைந்த இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமே சிதைக்கப்பட்டு விடக்கூடும். கடந்த 2023-ம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது.
அதன் பயனாக பிஹார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால்தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், சாதி விவரங்கள் பதிவு செய்யப்பட்டால், அது சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கத்தையே சிதைத்து விடும்.
எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக மக்களை எண்ணும் பணி நடைபெறும் போது, அரசின் சாதிகள் பட்டியலைக்காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறையை, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.