அன்புமணி

 
தமிழகம்

“சமூக நீதி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” - அன்புமணி ஆவேசம்

கி.மகாராஜன்

பாமக தலைவர் அன்புமணி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள், இளநிலை உதவி பேராசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர், மாணவர்கள் போராடி வருகின்றனர். பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர்.

இதிலிருந்து திமுக அரசு மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பது தெரிகிறது. தேர்தல் வாக்குறுதியில் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். இதனால் வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தமிழகத்தில் நிர்வாகம் என ஒன்றும் இல்லை. என்ன நடக்கிறது என்று முதல்வருக்கு தெரியவில்லை. ரூ.9.55 லட்சம் கோடி கடன்வாங்கியுள்ளனர். நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கனிமவளக் கொள்ளை அதிகளவில் நடைபெறுகிறது. இதற்கு காரணமானவர் தென் மாவட்டத்தில் இருக்கிறார். அவர் பெரிய பொறுப்பில் இருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு வரம். அந்த மலையை அழிக்கும் முயற்சியில் இருக்கின்றனர். இது தொடர்பாக விரைவில் சிபிஐ விசாரணை வரும்.

சமூக நீதி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மறுக்கிறார். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பிஹார் மாநிலங்களில் கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். அந்த மாநிலங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் அரசுகள் உள்ளன. தமிழகத்தில் சமூக அநீதி தான் உள்ளது. இவர்கள் பெரியாரின் பெயரை சொல்ல தகுதி இல்லாதவர்கள்.

கர்நாடக உயர் நீதிமன்றம், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி திட்டங்களை கொடுக்கலாம் என்று மாநில அரசுகளுக்கு கூறியுள்ளது. ஆனால் ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்லி வருகிறார். தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி அறிவிக்கப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பாமக இருக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். விரைவில் பெரிய கூட்டணி முடிவாகும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் யாரும் ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம், ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் பிரச்சினை இல்லாத சூழலை திருப்பரங்குன்றத்தில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT