மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி.
மதுரை: மேற்குத் தொடர்ச்சி மலையை நாசம் செய்து, கேரளாவுக்கு கனிம வளங்களைக் கடத்துகின்றனர். திமுகவினரின் ஊழல்கள் தொடர்பாக 2 மாதங்களில் சிபிஐ விசாரணை நடத்தும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
சோலைமலை முருகன் கோயில், ராக்காயி அம்மன் கோயில், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் தரிசனம் செய்து அரிவாளை காணிக்கையாக செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 5 ஆண்டுகால திமுகவின் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனால் வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
எங்கள் கூட்டணி பலமான, தெளிவான கூட்டணி, ஆனால் திமுக கூட்டணி குழப்பமான கூட்டணி. எங்கள் கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். திமுக ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி பெறும்.
இளைஞர்கள் மது, கஞ்சா, ஊழல் இல்லாத மாநிலம் வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தென் மாவட்டங்களில் கனிமவள ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கையின் வரம். அந்த மலையை நாசப்படுத்தி, இயற்கை வளங்களை அழித்து கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்துகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் 14 கி.மீ. மேம்பாலத்துக்கு ரூ.2,500 கோடி திட்டத்தை அறிவித்தார். அதில் ரூ.700 கோடி குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரிய தமிழக ஒப்பந்ததாரருக்கு பணி கிடைக்கவில்லை.
ஆனால், அதிகம் லஞ்சம் கொடுத்த ஆந்திர ஒப்பந்ததாரருக்கு பணியைக் கொடுத்துள்ளனர். இப்படி அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழும். திமுகவினரின் ஊழல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும்.
சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்தி வருகிறது. நாங்கள்தான் பாதுகாப்பு என்று கூறி அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலில், குடும்பத்தினருடன் அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார்.