பாமக-வுக்கு எதிராக செயல்பட்டதாகச் சொல்லி அக்கட்சியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி கட்சியின் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
ராமதாஸ் ஆதரவாளரும், அவரது அணியில் கட்சியின் கவுரவ தலைவருமான ஜி.கே.மணி தான், தந்தை - மகன் மோதலுக்குக் காரணம். ஜி.கே.மணி துரோகம் செய்திருக்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்புமணி முன்வைத்து வந்தார். பதிலுக்கு, ஜி.கே.மணியும், அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாமக-வுக்கு விரோதமாகச் செயல்படுவதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது என ஜி.கே.மணிக்கு, அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ஜி.கே.மணி பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று பாமக-வில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக-வின் பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி, கட்சியின் நலனுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதற்காக கட்சியின் அமைப்பு விதியின்படி, அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18-ம் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு டிசம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சியின் தலைவர் அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து டிசம்பர் 26-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக கட்சி தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “46 ஆண்டு காலமாக ராமதாஸூடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலமாக கட்சியில் தலைவராக இருக்கிறேன். இதுபோன்ற செய்தி வருகிறது என்றால் சிரிப்பதா, என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில், அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் இருக்கும் ஒருவர் என்னை எப்படி கட்சியிலிருந்து நீக்க முடியும்? அன்புமணிக்கு யாரையும் நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. நீக்குவதற்கு, சேர்ப்பதற்கு, பொறுப்பு கொடுப்பதற்கான அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது” என்று தெரிவித்தார்.
திமுக சொன்னதை சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார் - பாலு
இதனிடையே நேற்று ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் கே.பாலு, “தந்தை - மகன் பிரச்சினை ஆரம்பித்தபோது, ‘நான் எங்காவது சென்று விடலாமா என்று இருக்கிறேன். ஏதாவது விஷத்தைக் குடித்து விடலாமா என்று இருக்கிறேன். அன்புமணியும், ராமதாஸும் எனக்கு இரண்டு கண்கள். இரண்டு கண்களில் எது முக்கியம் என்று நான் எப்படி சொல்லுவேன்’ என இரட்டை வேடம் போட்டுக் கொண்டு இருந்தார். தற்போது அவர் போடுவது தான் அவரது உண்மையான வேடம். திமுக கொடுத்த வேலையை ஜி.கே.மணி சிறப்பாகச் செய்து முடித்து இருக்கிறார். அதற்கான வெகுமானம், சன்மானம் அவருக்கு திமுக-விடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் கிடைக்கும்” என்றார்.