தமிழகம்

திமுக தயவால்தான் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் வெற்றி: அன்புமணி ராமதாஸ் கருத்து

செய்திப்பிரிவு

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக சார்பில் பெரியார் பிறந்தநாள் நிகழ்வும், இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 பேருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று 21 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களை இந்நாளில் நினைவுகூருகிறோம்.

இடதுசாரிகள் தவெக கூட்டணியில் இருக்கிறார்களா..? இல்லையா..? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். கூட்டணியில் இருந்து கொண்டே போட்டியிடுவது என்பது குழப்பான ஒரு நிலைபாடு. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் திமுக தயவால் வெற்றி பெற்றவை.

இப்போது, தவெக கூட்டணிக்கு சென்றுவிட்டதும், வீர வசனம் பேசுவதில் அர்த்தம் இல்லை. சற்று அடக்கி வாசிக்க வேண்டும். அதிமுகவில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற பிறகு, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது தவெகவில் போட்டியிடுவோர் பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை ரத்து செய்துவிட்டு, தற்போது விவசாய நிலத்தில் செமி கண்டக்டர் சிப்தொழிற்சாலை தொடங்கப் போவதாக தவெக அரசு கூறுகிறது. அப்போது விவசாய நிலங்கள் பாதிக்கப்படாதா? இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT