தருமபுரி: மேகேதாட்டு அணை விவகாரத்தில் ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
காவிரியாற்றின் குறு குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேகேதாட்டில் 70 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையிலான அணையை கட்டினால் அப்பகுதியில் வாழும் விலங்கினங்கள் முற்றிலும் அழிந்து விடும் தமிழகத்துக்கு கழிவுநீர் கூட வராது. பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சி தண்ணீர் இருந்தால் போதுமானது. இந்த அணை கட்டப்பட்டால் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் தேக்கி வைக்கும் 40 டிஎம்சி தண்ணீரும் கிடைக்காது.
அந்தமான் தீவின் சுற்றுச்சூழல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குரல் கொடுப்பதை வரவேற்கிறோம். அதேநேரம். மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டும். கர்நாடகா முதல்வரி டம் பேசி இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்.
கர்நாடகா அரசு எந்த தீர்ப்பையும் மதிப்பதில்லை. மேகேதாட்டு அணை நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறானது. இவ்வாறு கூறினார்.
அதைத் தொடர்ந்து, பிரசுரங்களை வழங்கியபடி அன்புமணி நடைபயணம் மேற்கொண்டார். மாலையில் தருமபுரி நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எம்எல்ஏ சவுமியா, முன்னாள் எல்எம்ஏ-க்கள் வெங்கடேஸ்வரன், வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.