தமிழகம்

ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்களை இழுக்கும் அன்புமணி தரப்பு!

ந.முருகவேல்

விருத்தாசலம்: தந்தை - மகன் இடையே ஏற்பட்ட மோதலால் பாமக இரு அணியாக பிரிந்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ராமதாஸ் தலைமையில் 5 கட்டங்களாக 15 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விருத்தாசலம் தொகுதியில் அன்புமணி தரப்பில் மருத்துவர் தமிழரசி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் சூழலில், அங்கு ராமதாஸ் தரப்பில் இ.கே.சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் அன்புமணி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் பிடிகொடுக்காமல் பேசிவரு வதாக அன்புமணி தரப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக சுரேஷை தொடர்புகொண்டு பேசியதில், “நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். ஒரே கட்சி என்பதால் என்னிடம் பேசினர்.

          

ஆனால் என்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்” என்றார். இதற்கிடையில் 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக களமிறங்கி சொற்ப எண்ணிக்கையில் தோல்வியடைந்த கோ.ஜெகன், ராமதாஸ் அணியில் இருந்துவந்தார்.

இதனால் அவர் ராமதாஸ் தரப்பில் நெய்வேலி தொகுதி வேட்பாளராக களமிறங்கக் கூடிய சூழல் நிலவியது. ஆனால் நெய்வேலி தொகுதியில் அதிமுக நேரடியாக களமிறங்கியுள்ளது. எனவே ராமதாஸ் தரப்பில் கோ.ஜெகன் களமிறக்கப்பட்டலாம் என ராமதாஸ் ஆதரவாளர்கள் நம்பியிருந்தனர்.

இந்தச் சூழலில் ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் கோ.ஜெகன் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து அதிமுக தரப்பு, ஜெகனை இழுத்தால் மேலும் ஆதரவு கிடைக்கும் என அன்புமணியிடம் பேசியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கூட்டணி தர்மத்தைப் பின்பற்றி அன்புமணி தரப்பு கடந்த சில தினங்களாக ஜெகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து அவர் நேற்று பனையூர் சென்று அன்புமணியை சந்தித்தார். அன்புமணி தலைமையிலான பாமகவில் இணைவது குறித்து ஜெகனிடம் பேசியதில், “இனி கட்சி சின்ன ஐயா தான். வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் அணி வேட்பாளராக களமிறக்கப்பட்ட புகழேந்தியையும் அன்புமணி தரப்பு இழுத்துவிட்டதால், விக்கிரவாண்டிக்கு த.ஸ்டாலினை வேட்பாளராக அறிவித்துள்ளார் ராமதாஸ்.

அன்புமணி தரப்பில் பாமக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்ட தொகுதிகளில் ராமதாஸ் போட்டி வேட்பாளர்களை களமிறக்குவதும், அவ்வாறு களமிறக்கப்படுபவர்களை தங்கள் பக்கம் இழுப்பது என்ற வேலையை அன்புமணி தரப்பும் மேற்கொள்வதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT