சென்னை: இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுவதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 700 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் ஓரளவு சமாளிக்கக் கூடிய கட்டணத்தில் மருத்துவப் படிப்பை படிக்கும் நல்வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்கள், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,900 இடங்கள், 5 தனியார் பல்கலைக் கழகங்களில் 850 இடங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 3,050 இடங்கள், ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் 150 இடங்கள் என மொத்தம் 13,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக 4,247 இடங்களும், மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 97 இடங்களும் என 4,344 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்படும். இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் உள்ள 4,750 எம்.பி.பி.எஸ் இடங்களில் 50 % முதல் 65 % இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தன லட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவை இப்போது நிகர்நிலை பல்கலைக் கழகங்களாக மாறி விட்டதால், அவற்றில் உள்ள 650 இடங்களில் இருந்து மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு வந்த 350 இடங்கள் இப்போது பறிபோகின்றன. இவை தவிர மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப்படவிருந்தப்பதால் கூடுதலாக 350 இடங்களை மாநில அரசு ஒதுக்கீடு இழக்கும். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 700 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாறிய பிறகும் கூட, அவை தமிழ்நாட்டில் தான் செயல்படும் என்றாலும், அவற்றுக்கான மாணவர் சேர்க்கை அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விடும். அதுமட்டுமின்றி, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட இக்கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்க முடியும்.
ஆனால், அவை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டால், அவற்றில் மருத்துவப் படிப்பில் சேர ரூ.23 லட்சம் முதம் ரூ.30 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் இந்த நிறுவனங்களில் சேர முடியாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டிருப்பதே சட்ட விரோதம் ஆகும். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட வேண்டும் என்றால், அதற்கு அந்தக் கல்லூரி இணைவு பெற்றிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தடையின்மை சான்று கட்டாயம் ஆகும். ஆனால், தடையின்மை சான்று இல்லாமலேயே தனியார் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தனியார் கல்லூரிகளில் இருந்த 700 அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை இடங்கள் மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் காலப் போக்கில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாறுவது இயல்பானது தான் என்பதால், அதனால் ஏற்படும் மாணவர் சேர்க்கை இடங்களை ஈடுகட்டும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது, ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்குவது போன்றவை தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையில் இருந்து முந்தைய அரசு தவறிவிட்டது.
தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அந்த நிலைப்பாட்டை வென்றெடுக்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வருகிறது. இதை முந்தைய திமுக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திமுக அரசு தொடங்கவில்லை. அதேபோல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இடங்களும் அதிகரிக்கப்படவில்லை. இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியே தொடங்காத அரசு என்ற அவப்பெயரை திமுக அரசு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் தேசிய மருத்துவ ஆணையம் விலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டுமே கொண்டுள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி கூறியுள்ளார்.