பாமக தலைவர் அன்புமணி

 
தமிழகம்

‘ராசிபுரம் புதிய பேருந்து நிலைய திறப்பை அரசு கைவிட வேண்டும்’: அன்புமணி

நகரில் இருந்து 10கி.மீ. தொலைவில் உள்ளதாக குற்றச்சாட்டு

மு.சக்தி

சென்னை: ராசிபுரத்திற்கு வெளியில் யாருக்கும் பயன்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை கைவிட வேண்டும் என்றும், இப்போதுள்ள பேருந்து நிலையத்தையே மேம்படுத்தி இன்னும் சில பத்தாண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்துகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் யாருக்கும் பயன்படாத வகையில், ஊருக்கு வெளியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி திறப்பு விழா நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பதை அறிந்தும் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறக்க புதிய அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

ராசிபுரம் நகர எல்லையிலிருந்து 9.50 கி.மீ தொலைவில் உள்ள அணைப்பாளையம் படையப்பா நகரில் தனியாரிடமிருந்து கொடையாகப் பெறப்பட்ட 7.03 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 2024-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த நான், பழைய பேருந்து நிலையத்தை தொடர்ந்து இயங்கச் செய்ய வேண்டும்; புதிய பேருந்து நிலையத்தைக் கைவிட வேண்டும் என்று 2024ம் ஆண்டு செப்.13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், அதைப் பொருட்படுத்தாத திமுக அரசு, 2024ம் ஆண்டு நவ.24ம் தேதி புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது. அதன்பின் கடந்த பிப்ரவரி 23ம் தேதி பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில், அதைத் திறக்க முயன்றது. ஆனால், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

ராசிபுரம் மக்களின் உணர்வுகளை மதித்து புதிய பேருந்து நிலையத் திட்டத்தை தவெக அரசு கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முந்தைய திமுக அரசு மேற்கொண்ட அதே நிலைப்பாட்டை மேற்கொண்டு புதிய பேருந்து நிலையத்தைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் சில மாதங்களுக்கு முன் ஏலத்தில் விடப்பட்ட நிலையில், மீதமுள்ள கடைகளையும் ஏலம் விடும் முயற்சியில் புதிய அரசு ஈடுபட்டிருக்கிறது; விரைவில் திறப்பு விழா நடத்தவும் தீர்மானித்துள்ளது.

உண்மையில் ராசிபுரத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் மக்களுக்கானது அல்ல. மாறாக, தனியார் நில வணிகத்திற்கானது தான். புதிய பேருந்து நிலையத்தின் முதன்மைப் பிரச்சினை பெண்களுக்கான பாதுகாப்பு தான். நகர எல்லையிலிருந்து வெகுதொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருப்பதால் அங்கும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரவில் மட்டுமின்றி, பகலிலும் பாதுகாப்பு இருக்காது.

அதுமட்டுமின்றி, ஏரி பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருப்பதால் சிறிய மழை பெய்தால் கூட வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி விடும். இப்படி ஒரு பேருந்து நிலையம் தேவையா? மேலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கியப் பகுதிகளுக்கு செல்ல குறைந்தது 9 கி.மீ முதல் 12 கி.மீ வரை கூடுதலாக பயணிக்க வேண்டியிருக்கும்.

அதற்காக ஆட்டோ, வாடகை டாக்சி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், கூடுதலாக ரூ.100 முதல் ரூ.200 வரை செலவழிக்க நேரிடும். பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக பேருந்துகள் கூடுதலாக 10 கி.மீ பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு ஆகும் செலவை ஈடு செய்ய பேருந்துக் கட்டணத்தை உயர்த்த நேரிடும். இதுவும் மக்களைப் பாதிக்கும்.

இப்போதுள்ள பழைய பேருந்து நிலையம் மாற்றப்பட்டால், அங்குள்ள 120 கடைகளை நடத்தி வரும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்பதால் அங்குள்ள கடைகளில் வணிகம் பாதிக்கும். அதுமட்டுமின்றி, ராசிபுரத்தைப் பொறுத்தவரை அதன் தொழில் மற்றும் வணிகத்திற்கு திருச்செங்கோடு, ஆத்தூர், பேளுக்குறிச்சி மார்க்கத்தில் உள்ள கிராமங்களையே நம்பியுள்ளது.

ஆனால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இதற்கு எதிர்த்திசையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. அதனால், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ராசிபுரத்திற்கு செல்லாமல் சேலம், நாமக்கல் நகரங்களுக்கு சென்று விடும் வாய்ப்புள்ளது. அவ்வாறு சென்றால், ராசிபுரம் அதன் தொழில் மற்றும் வணிக ஆதாரங்களை முற்றிலும் இழந்துவிடக்கூடும்.

அதே நேரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலத்தை இலவசமாக வழங்கிய படையப்பா நகர் என்ற பெயரில் நில வணிகத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனத்திற்கு தான் பயன் கிடைக்கும். கடந்த பல ஆண்டுகளாக விற்கப்படாமல் இருந்த படையப்பா நகரின் வீட்டு மனைகள், அந்தப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் வருவதாக அறிவிக்கப்பட்டவுடன் வேகமாக விற்கத் தொடங்கியுள்ளன.

அங்குள்ள மனைகளின் விலை உயர்ந்து வருவதாகவும், இது 25 மடங்கு முதல் 30 மடங்கு வரை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதனால், பேருந்து நிலையத்திற்கு இலவசமாக நிலம் கொடுத்த நிறுவனத்திற்கு பல நூறு கோடி லாபம் கிடைக்கும். இதைக் கருத்தில் கொண்டு தான் புதிய பேருந்து நிலையத்திற்கு திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக முந்தைய ஆட்சியாளர்களுக்கு பெருந்தொகை தரப்பட்டதாக புகார்கள் உள்ளன.

மீண்டும், மீண்டும் சொல்கிறேன்.... ராசிபுரத்திற்கு இப்படி ஒரு புதிய பேருந்து நிலையம் தேவையில்லை. அந்தப் பகுதி வளர்ச்சியடைய இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும். அதுவரை வணிகர்களும், மக்களுக்கும் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. மாறாக, நகரைச் சுற்றிலும் புறவழிச்சாலை அமைப்பதுடன், நகர சாலைகளை விரிவாக்கம் செய்தாலே நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். அவ்வாறு செய்தால் புதிய பேருந்து நிலையம் தேவையில்லை.

ஒருவேளை புதிய பேருந்து நிலையம் அமைத்தாலும், அதை நகரிலிருந்து 2 கி.மீ சுற்றளவில் அமைத்தால் தான் தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். முந்தைய திமுக ஆட்சியில் எங்கெல்லாம் புதிய பேருந்து நிலையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் தனியார் நில வணிகத்தைச் செழிக்கச் செய்யும் நோக்குடன் ஊருக்கு வெகு தொலைவில் தான் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் மிகப்பெரிய அளவில் திமுக ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஊழல் திமுகவுக்கு மாற்றாக ஊழலற்ற ஆட்சி வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் ஊழல் செய்வதற்காக அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைத் திறக்கத் துடிப்பது ஏன்? தருமபுரியில் இதேபோல் தான் ஊருக்கு வெளியில் தனியார் மூலம் பேருந்து நிலையம் கட்டித் திறக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, ஓசூர், கும்பகோணம், கடலூர் உள்ளிட்ட நகரங்களிலும் இதேபோல் தான் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் நடந்த ஊழல் பற்றி விசாரிப்பதற்கு பதிலாக அவற்றைத் திறக்கத் துடிக்கக் கூடாது.

எனவே, ராசிபுரத்திற்கு வெளியில் யாருக்கும் பயன்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை கைவிட வேண்டும். மாறாக, இப்போதுள்ள பேருந்து நிலையத்தையே மேம்படுத்தி இன்னும் சில பத்தாண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று அன்புமணி கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT