உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை: ‘மதுரை மாரத்தான் போட்டியில் மயக்கமடைந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன். இதற்கு பள்ளி கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, திமுக ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரிகமான செயலாகும்’ என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா’ (விஜய் - ராகுல் ViRa) விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன். இதற்கு பள்ளி கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்ப்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க. ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரிகமான செயலாகும்.
தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு முடிவு கட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதல்வர் ஜோசப் விஜய் நடத்திக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத வகையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பதிவு அமைந்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
கடந்த காலத்தில் அவர் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது ஊழலின் ஊற்றுக் கண்ணாக அந்த துறையை மாற்றி எத்தகைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றது என்பதை சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் விலாவாரியாக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாத அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னை குறிவைத்து, இழிவுபடுத்தி பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மேலும், தங்களது ஐ.டி. விங் மூலம் இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தை தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.