தமிழகம்

சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனு: நாளை விசாரணைக்கு வருகிறது

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை (வியாழன்) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் முன்னாள் பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று முன்தினம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப் பதாவது: ஆரம்பத்தில் சாதாரண பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவு 7 மற்றும் 12-ன் கீழ் மாற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5-வது நபராக எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் திட்டமிட்டு என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனி நபர்கள் பணம் வசூலித்ததாக மட்டுமே காவல் துறை குற்றம் சாட்டி உள்ளது.

நான் நேரடியாக லஞ்சம் பெற்றதாகவோ அல்லது சட்ட விரோதமாக பயன்பெறும் வகையில் செயல்பட்டதாகவோ எந்த ஆதாரத்தையும் போலீஸார் இதுவரை தெரிவிக்கவில்லை.

மருத்துவக் கண்காணிப்பு தேவை

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17-ஏ-ன் படி, என் மீதான விசாரணைக்கு ஆளுநரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது சட்டவிரோதம்.

காவல் துறை விசாரணைக்கு அழைத்த போது நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். நான் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நாளை (வியாழன்) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வரவிருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT