முதல்வர் ரங்கசாமி

 

படம்.எம்.சாம்ராஜ்

தமிழகம்

புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு: தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் ரங்கசாமி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகனுக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் நாளை நண்பகல் 12 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அன்றே தட்டாஞ்சாவடி தொகுதியை முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்கிறார் என தெரிகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களை கைப்பற்றியது. திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, சுயேச்சைகள் 3 இடங்களையும் வென்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி கடந்த 13-ம் தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக உப்பளம் தொகுதியில் 5-வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிறப்பித்தார். தொடர்ந்து நாளை நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அன்பழகனுக்கு சட்டப்பேரவை உறுப்பினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வந்து தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழ் நான்காம் தேதி பெறப்பட்டது. 14 நாட்களுக்குள் அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதியின் கீழ் தட்டாஞ்சாவடி தொகுதியை ரங்கசாமி நாளை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து வரும் 20-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.

இதன் பின்னர் அந்த தினத்தில் சட்டப்பேரவை கூடியவுடன் அன்பழகன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி நீங்கலாக 28 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்கின்றனர். புதுச்சேரியில் இன்னும் 3 அமைச்சர்கள் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. அதேபோல, புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மற்றும் இரு அமைச்சர்களுக்கும் துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT