அன்பழகன்
புதுச்சேரி: “புதுச்சேரி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் மோதல் போக்கு என்பது தவறான கருத்தாகும்” என்று சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை தற்காலிக தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும். நாராயணசாமிக்கு அரசியல் ஓய்வு தேவை. மக்களாட்சி நடத்தி வரும் முதல்வர் மீது தொடர்ந்து பொய்யை கூறிவரும் நாராயணசாமி தன்னை திருத்திக் கொண்டு அமைதி காக்க வேண்டும். பல ஆண்டு காலம் உழைத்த காங்கிரஸ் கட்சியில் தனக்கு எதிராக என்ன நடக்கிறது,
காங்கிரஸில் தனக்கு என்ன மரியாதை தலைமையால் வழங்கப்படுகிறது என்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல், பிறகட்சி ஆட்சி நடத்தும் ஒரு அரசை குறை கூறுவதை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக ஓர் அங்கமாக உள்ளதால் என்னை சட்டப்பேரவை தற்காலிக தலைவராக முதல்வர் ரங்கசாமி நியமித்து உள்ளார். அந்த அதிகாரத்தின் அடிப்படையில் தற்போது வரை தற்காலிக தலைவராக உள்ளேன். துணைநிலை ஆளுநர் ஒப்புதலோடு தான் தற்போது சட்டப்பேரவை தற்காலிக தலைவராக செயல்பட்டு வருகிறேன்.
நிரந்தர சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இந்த பொறுப்புகளை நான் கவனிக்க வேண்டும் என அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பணிகளை கவனித்து வருகிறேன். சட்டப்பேரவை தலைவர் பதவி சம்பந்தமாக பல்வேறு கருத்துகளை கூறுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, லஜக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பாஜக உரிய வழிவகை செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல் துறையினுடைய செயல்பாடு இன்னும் திறம்பட இருக்க வேண்டும். சமீப காலமாக தனிப்பட்ட முறையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றாலும் சட்டம் - ஒழுங்கு காப்பாற்றுவதில் அரசும் காவல் துறையும் முனைப்போடு உள்ளது.
ஒருசில தினங்களுக்கு முன்பு கூட உள்துறை அமைச்சர் இது சம்பந்தமாக காவல்துறையின் உயர்மட்ட கூட்டத்தைக் கூட்டி உள்ளார். ஏனாம் பகுதியில் பெய்த பெரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி தேவை என அந்தப் பகுதியின் எம்எல்ஏவும், பொதுப்பணித்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அனுமதி அளித்துள்ளார். கூடுதலாக இன்னும் ரூ.5 ஆயிரம் தேவை என அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இதில் அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் மோதல் போக்கு என்பது தவறான கருத்தாகும்” என்று அவர் தெரிவித்தார்.