பாமக நிறுவனர் ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தில் சஞ்சீவராயக் கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதிக்கு 25-07-1939-ல் மகனாக பிறந்தவர் ச.ராமதாஸ். மருத்துவம் படித்த இவர், வன்னியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து, வன்னியர் சங்கத்தை கடந்த 20-07-1980-ல் உருவாக்கினார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை முன்னேடுத்தார். சமூக நீதி போராட்டத்தை முன்னின்று வழி நடத்தினார். 1987-ல் போராட்டம் தீவிரமடைந்தது. அதிமுக ஆட்சியில் 17-09-1987-ல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற 21 வன்னியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற முடியும் என சூளுரைத்த ராமதாஸ், கடந்த 16-07-1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். அதே நேரத்தில் தேர்தல் அரசியலில் போட்டியிட மாட்டேன் என சபதம் எடுத்து, இறுதிவரை கடைபிடித்துள்ளார். 1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாமக தனித்து போட்டியிட்டது. பண்ருட்டி தொகுதியில் யானை சின்னத்தல் போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். முதல் வெற்றியை பாமக பதிவு செய்தது. மேலும் 1996-ல் நடைபெற்ற தேர்தலில் ரஜினி அலை வீசியபோதும், 4 தொகுதிகளில் வென்றது.
அதன்பிறகு கூட்டணி அமைத்து தேர்தலை பாமக சந்தித்தது. வட மாவட்டங்களில் வலுபெற்ற கட்சியாக உருவெடுத்தது. திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்தார் ராமதாஸ். பாமக இருக்கும் இடமே வெற்றி பெறும் என முழங்கினார். ஆனால், சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கிறார் ராமதாஸ் என விமர்சிக்கப்பட்டார்.
வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சியிலும், மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியிலும் பங்கேற்றார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலில் எழில்மலையை மத்திய அமைச்சராக்கினார். மகன் அன்புமணியை மாநிலங்கவை உறுப்பினராக்கி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் எனும் ஒரு குக்கிராமத்தில் இருந்து அரசியல் சாம்ராஜ்யத்தை ராமதாஸ் நடத்தினார்.
இப்படியாக மாநில மற்றும் தேசிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த ராமதாஸுக்கு, கடந்த இரு ஆண்டுகளாக இறங்கு முகமாகவே, அரசியல் பயணம் இருந்தது. பாமக தலைவராக மகன் அன்புமணியை கடந்த 2022-ல் நியமித்த பிறகு, உட்கட்சி பூசல் அதிகரிக்க செய்தது. பாமக, வன்னியர் சங்கத்தில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டி தந்தை மகனுக்கு இடையே அதிகரித்தது.
2024 டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழுவில் தொண்டர்கள் முன்னிலையில் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் வெடித்தது. மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகனும், தனது பேரனுமான முகுந்தனை பாமக இளைஞர் சங்க தலைவராக ராமதாஸ் அறிவிக்க, மேடையிலேயே மைக்கை தூக்கி வீசி அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
அதன்பிறகு இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர். இருவரும் நான்தான் உண்மையாக பாமக என கூறி, கட்சியில் இருந்த தங்களது எதிர்ப்பாளர்களை நீக்கினர். தலைமை பண்பு இல்லாதவர், தாயின் மீது பாட்டிலை வீசியவர், முன்கோபக்காரர், வேவு கருவி பொறுத்தி தந்தையை வேவு பார்த்தவர் என மகன் அன்புமணியை கடுமையாக ராமதாஸ் சாடினார்.
மேலும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்கிறேன், அவரோ மனைவி சொல்லே மந்திரம் என்கிறார் என விமர்சித்தார். 2024-ல் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு சவுமியாவே காரணம் என கூறி அவரையும் விமர்சித்தார். மேலும், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். மகனுக்கு மாற்றாக மகள் ஸ்ரீகாந்தியை பாமக செயல் தலைவராக்கினார்.
அதே நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட அன்புமணி, செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி, நான்தான் உண்மையான பாமக தலைவர் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, பாமகவின் மாம்பழ சின்னத்தை பெற்றார். பாமக மற்றும் சின்னத்தை என்னிடம் இருந்து திருடி கொண்டார் என குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ராமதாஸ் ஏறியும் பலன் இல்லை. அன்புமணி வசம் பாமக சென்றது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட அன்புமணி, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆனால், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ராமதாஸ், தான் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தார். மேலும் பல தொகுதிகளில் மூன்று இலக்கு எண் வாக்குகளை கடக்க போராடி இருக்கிறார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்தார். அதன்பிறகு பொதுவெளியில் ராமதாஸ் பயணிக்கவில்லை.
தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து மெல்ல மெல்ல ஒதுங்கினார் ராமதாஸ். தந்தை, மகனை மீண்டும் ஒருங்கிணைக்க குடும்ப உறவுகள் தீவிரம் காட்டியது. வயதை காரணமாக கூறி, வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம் என்றும், இதே நிலையை தொடர்ந்தால், நீங்கள் உருவாக்கிய பாமகவும், உங்களுடன் முடிவுக்கு வந்துவிடும் என எச்சரித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக மகனுடன் இணக்கமாக செல்ல ராமதாஸ் சம்மதித்துள்ளார். தைலாபுலத்தில் ராமதாஸ் - சரஸ்வதியின் 61-வது திருமண நாளில், குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசி பெற்றார் அன்புமணி. மகனை ஆரத்தழுதி கண்ணீர் சிந்தினார் ராமதாஸ்.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்வி நிலையத்தில் தனது 88-வது பிறந்தநாளை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(ஜுலை 25) கொண்டாடினார். ராமதாஸும், அன்புமணியும் கடந்த ஓராண்டுக்கு பிறகு ஓரே மேடையில் அமர்ந்தனர். அதேமேடையில் ராமதாஸின் மனைவி சரஸ்வதியும், அன்புமணியின் மனைவி சவுமியா எம்எல்ஏவும் அமர்ந்திருந்தனர்.
மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசிய ராமதாஸ், “உங்களுக்கு நல்ல செய்தியை சொல்கிறேன். இன்று முதல் அரசியல் துறவரம் பூண்டுகிறேன். அரசியல் துறவரம் என்று சொன்னால், நான் அரசியலை பேச மாட்டேன். அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். என்னை சந்திக்க வருபவர்களை பார்ப்பேன். நலம் விசாரிப்பேன். அவ்வளவுதான். அரசியலில் தலையிட மாட்டேன். அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். அவரது மனைவியும், நாங்களும் துணையாக இருப்போம்.
என்னை பார்க்க வருபவர்கள், என்னை பார்த்துவிட்டு, அய்யா நலமா என கேட்டுவிட்டு செல்லலாம். அரசியல் பேசுவதற்கு ஏதுமில்லை. இன்று முதல் அரசியல் துறவரம் மேற்கொண்டிருக்கிறேன். இந்த கல்விக் கோயில் மேலும் சிறப்பாக செயல்பட பாடுபட வேண்டும்.
இதுவே, எனக்கு நீங்கள் செய்கின்ற காணிக்கையாக கருதுகின்றேன். உங்களுடன் நீண்ட நேரம் பேச ஆசை இருந்தாலும், தலை சுற்றல் வியாதி, இப்போதும் எட்டி பார்க்கிறது. ஆனாலும் உங்களை பார்க்க வேண்டும் என ஆவலுடன் வந்துள்ளேன். என்னை வாழ்த்தும் உங்களது நல்ல உள்ளம், எனக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவு எப்போதும் மாறாது” என்றார்.
அரசியல் துறவரம் பூணுகிறேன் என ராமதாஸ் கூறியபோது, எவ்விதமான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மேடையில் அன்புமணி அமைதியாக காணப்பட்டார். அவரது உடல்மொழி மூலமாக, ராமதாஸின் அரசியல் ஓய்வு அறிவிப்பு என்பது குடும்பத்தினருடன் ஏற்கெனவே கலந்து பேசி திட்டமிட்டு, நிதானமாக எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது.
47 ஆண்டுகள் பயணம், 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வந்த பாதங்கள் என அடிக்கடி கூறிய ராமதாஸின் அரசியல் அத்தியாயம் என்பது சமூக நீதிக்கான போராட்டத்தின் ஒரு சகாப்தம் எனலாம் என்கின்றனர் பாமகவை உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்கள்.