தமிழகம்

முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால ஆட்சி எப்படி? - தவெக அரசு மீதான பாராட்டுகளும் விமர்சனங்களும்

பாரதி ஆனந்த்

தவெக ஆட்சி அமைத்து ஒரு மாத காலம் உருண்டோடிவிட்டது. தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைமை ச.ஜோசப் விஜய்யும் தமிழக ஆட்சி அரியணைக்கு புதிய வரவுதான். என்றாலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு, அதனினும் பெரிதான மக்கள் ஆதரவுள்ள வரவு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ மொழிக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் நல்லது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பின்னணியில் முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால ஆட்சி மீதான பாராட்டுகள், விமர்சனங்கள் குறித்து ஒரு விரைவுப் பார்வையை செலுத்துவோம்.

59 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்தது திமுகவும், திமுகவை எதிர்க்க உருவாக்கப்பட்ட அதிமுகவும். அடிப்படைக் கொள்கைகளில் பெரிய வித்தியாசம் இரண்டுக்கும் இல்லை. அவற்றை எப்படி செயல்படுத்தின, மத்தியில் இருந்த ஆட்சியாளர்களிடம் மாநிலத்துக்காக என்னென்ன சாதித்தனர் என்பதில்தான் வித்தியாசம் இருந்தன.

“மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதார என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தைச் சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி எல்லோர்க்கும் எல்லாமுமான சமநிலைச் சமூகம் உருவாக்குவது,” என்ற கொள்கையில் தங்கள் கட்சி கட்டியெழுப்பப்பட்டு இருப்பதாக தவெகவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தவெக அரசின் சில செயல்பாடுகளை நிச்சயமாகப் பாராட்டியே ஆகவேண்டும். அதில் முதலாவது, முதன்முறையாக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வாய்ப்பு கொடுத்தது. 4 பெண் அமைச்சர்களை உருவாக்கியது. தொழில் துறைக்கு முதன்முறையாக ஒரு பெண்ணை அமைச்சராக்கியது என்று பட்டியலிடலாம்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது பேசக் கூடாத வார்த்தைகள் போல் கூட்டணிக் கட்சிகளை திமுக, அதிமுக பண்ணையார்த்தனத்தோடு அணுகிய நிலையில், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் என்று கூட்டணிக்கு வந்தவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுத்திருக்கிறது தவெக.

அடுத்தடுத்து நாற்காலிக்கு சிக்கல் வராமல் இருப்பதற்கான நுட்பமான நகர்வு என்றாலும்கூட இது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை தொடக்கியுள்ளது.

இனி கூட்டணிக்கு வரும் கட்சித் தலைவர்களிடம், “நீ எனக்கு தம்பி மாதிரி” போன்ற வசனங்களோடு கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய ‘செக்’, ஆண்ட கட்சிகளுக்கு அவசியமானதே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இளைஞரணியை கருத்தாய் கவனிக்கத் தவறிய திமுக, இளைஞர், இளம்பெண் பாசறைகளில் கோட்டைவிட்ட அதிமுக மத்தியில் கைவசமிருந்த தேர்தல் உத்தியாளர்களைக் கொண்டு இளைஞர்களைத் தட்டித் தூக்கியதோடு, அரசியலில் அவர்களின் முக்கியத்துவத்தை கற்பித்துக் கொடுத்த தவெக அரசில் 41 எம்எல்ஏக்கள் 40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள்.

“திமுகவில் உள்ள பழைய மாணவர்கள் பலர் தேர்வில் ரேங்க் எடுத்தும் வகுப்பை விட்டு வெளியேற மறுக்கின்றனர்” என்று ரஜினி அன்று சொன்னது தவெகதான் சரியாக உள்வாங்கிக் கொண்டதுபோல!

தவெக ஆட்சியைப் பிடித்தாலும், அது கூட்டணி ஆட்சிதான். அதனால் அரசியல் ரீதியாக யார் வகுத்துக் கொடுத்த சூத்திரமோ தெரியவில்லை, அதிமுகவின் முக்கிய முகங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது.

‘பூத் கமிட்டி கூட இல்லாத கட்சி என்ற விமர்சனத்தை இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பொய்யாகியது என்றே வைத்துக் கொண்டாலும்கூட, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தல் என்று தன் இருப்பை பலமாக்க அரசியலில் முங்கு நீச்சல் தெரிந்தவர்கள் வேண்டும் என்று கட்சியை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. அதை ‘குதிரை பேரம்’ என்றும் சொல்லலாம். ஒரு காந்தம் போல் எல்லாவற்றையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவை கரைக்கிறது, திமுகவை கரைக்குமா’ என்றும் விவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அமைப்பு ரீதியாக இதெல்லாம் என்றால், ஆட்சி ரீதியாக தவெகவின் கான்க்ரீட் ஆக்‌ஷன் என்னவென்று பார்ப்போம்.

1,2, 3, 4,5 என்று பட்டியலிட ஆசைதான். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வரவேற்கத்தக்கது. ஆனால், அன்றாடம் ஆங்காங்கே நிகழும் மின்வெட்டுகளுக்கு ‘ஃப்யூஸ் கட்டை திருட்டு’ குற்றச்சாட்டு தாண்டி அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. உள்ளபடியே எங்கள் அண்ணன் இருக்கிறார் என்று வாக்களித்த மகளின் மனங்களில் ஒரு துணிச்சல் பிறந்திருக்கிறது என்கின்றனர் தவெகவுக்கு வாக்களித்த மக்கள். இன்னொருபுறம், அண்ணா பல்கலைக்கழக வளாக சம்பவத்தில் ‘யார் அந்த சார்?’ போலவே ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் ‘யார் அந்த மேலிடம்?’ என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளன.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐஜி பவானீஸ்வரி

போதைப் பொருள் ஒழிப்புக்கு மாவட்டம்தோறும் சிறப்புப் படை அறிவித்தது ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ ரகம். சமூகத்தில் கிராமங்கள் வரை புரையோடிப்போன போதையை ஒழிப்பது பல்வேறு குற்றங்களையும் தடுக்கக் கூடியது. ஆனால் “தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியது” என்ற முதல்வர் விஜய்யின் பேச்சு பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

717 டாஸ்மாக் கடைகள் மூடிய உத்தரவு பரவலாக அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதன் முழு விவரமும் வெளியிடப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும், டாஸ்மாக் கடைகள் மூடலில் குளறுபடிகள் இருப்பதாக வரும் புகார்களும் கவனிக்கத்தக்கது. அதேபோல், தவெக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. முந்தைய ஆட்சியில் ரூ.10 என்றால் இப்போது ரூ.20 என்று அதிமுக இதை விமர்சித்து வருகிறது.

“ஓர் அரசியல் இயக்கம் எப்போதும் மாற்றத்தை வெறும் பெருங்குரலாக மட்டும் ஒலிக்கக் கூடாது. அடிப்படையில் மக்களுக்கான அரசியலை, அவர்கள் நலன்கள் சார்ந்த செயல் திட்டங்களைக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” - இதுவும் தவெக இணையதளத்தில் கொள்கை விளக்கக் குறிப்பாக இடம்பெற்றதுதான்.

தவெக அரசின் மீதான சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, அரசு சேவைகள் தடையின்றி கிடைப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவைதான்.

குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பு தவெக அறிவித்த ரூ.3,000 உதவித் தொகை, 6 சிலிண்டர்கள் போன்றவை. பெண்கள் அனைவரின் பெரிய கவலையும் பாதுகாப்பு சார்ந்ததாக இருக்கிறது. தமிழக மக்கள்தொகையில் 18 முதல் 39 வயதில் உள்ள இளைஞர்கள் 42% பேர். வேலைவாய்ப்பும், ஊழலற்ற அரசும் தான் நிச்சயமாக அவர்களின் எதிர்பார்ப்பு. அதைப் பூர்த்தி செய்வதற்கான அறிவிப்புகளையே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறார்கள் கள நிலவரத்தை ஆராய்ந்து எழுதும் மூத்த பத்திரிகையாளர்கள்.

தவெக ஆட்சிக்கு வந்தால், பயிர்க்கடன் முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, ரூ.50,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்திருப்பது விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. விஜய்யின் வாக்குறுதியை அவர்கள் ‘காதில் பூச்சுற்றி போராட்டம்’ நடத்தி விமர்சித்திருக்கின்றனர்.

கல்வித் துறையிலும், தொழில் துறையிலும், மகளிர் மேம்பாட்டிலும், இன்னும்பிற தொகுதிகளிலும் அரசு கண்கூடாகச் செய்து காட்டியவைதான் தவெக மீது கொண்ட நம்பிக்கை நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யும்.

“ஆய்வுகளை எல்லாம் அதிகாரிகள் செய்வார்கள். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அதற்காக மெனக்கிட்டு அதிரடிகளைக் காட்டி, கூடவே பிஆர் டீம்களுடன் சென்று ரீல்ஸ் போடாதீர்கள்,” என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை அரசு கவனிக்க வேண்டும்.

இதுபோக மும்மொழிக் கொள்கை, நீட் ரத்து விவகாரம், மேகேதாட்டு, தொகுதி மறுவரையறை, சாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் சில நாட்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று தவெக அரசுக்கு சவால்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

நடக்கும் குற்றங்களுக்கோ, மின்வெட்டு பிரச்சினைகளுக்கோ, நலத்திட்டங்கள் தொடர்வதற்கோ, தொடங்குவதற்கோ முந்தைய ஆட்சியை, கஜானா காலி என்பதை, புதிதாக வந்துள்ளோம் என்பதையே சாக்குகளாகச் சொல்வதை நிச்சயமாக தீர்ப்பெழுதிய மக்கள் பொறுக்க மாட்டார்கள்.

‘தூய சக்தி’ என்ற தவெகவின் டேக்லைனை நம்பியவர்கள் நலம் பெறாவிட்டால் அதை தூக்கியெறியும் சக்தியாகவும் மாறுவார்கள் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

தவெக இன்னும் 60 மாதங்கள் ஆட்சியில் இருக்கப்போகும் பட்சத்தில் வெறும் 30 நாள் செயல்பாட்டை வைத்து தவெக அரசுக்கு ‘ரேங்க் கார்டு’ கொடுக்க முடியாது என்றாலும் தவெகவின் தேனிலவு காலம் முடிந்துவிட்டது என்பதால் சறுக்கியதை சுட்டிக் காட்ட வேண்டியதும் இங்கே அவசியமாகிறது.

இந்த ஒரு மாத காலத்தில், தவெக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பத்திரிகையாளர் சந்திப்பிலும், மேடைகளிலும் சொதப்பியதை வைத்து, ட்ரோல்களுடன் ‘முதிர்ச்சியின்மை’ என்ற விமர்சனங்களும் மிகுந்து வருவதை கவனிக்க முடிகிறது.

இது குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. “தவெக அரசில் 31 அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்கள். 101 எம்.எல்.ஏ.க்கள் முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்தவர்கள். அவர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளதும் ஏற்கத்தக்கதே.

அதேபோல், தனது முதல் மாத ஆட்சி காலத்தில், நேரம் தவறாது தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்தாலும் கூட, ஒருமுறை கூட செய்தியாளர்களை விஜய் சந்திக்கவில்லையே என்ற குறையும் முன்வைக்கப்படுகிறது. அதற்கும் ப.சிதம்பரம் ஒரு கருத்தைப் பகிர்ந்தது கவனிக்கத்தக்கது.

“பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. விஜய் முதல்வராகி ஒரு மாதம்தான் ஆகிறது. போகப் போகத்தான் தெரியும்” என்பதே அந்தக் கருத்து.

SCROLL FOR NEXT