தமிழகம்

அமைச்சரவை விரிவாக்கத்தில் மதுரைக்கு கூடுதலாக ஓர் அமைச்சர்? - தவெகவினர் காத்திருப்பும் பின்னணியும்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: 8 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றும் மற்ற மாவட்டங்களுக்கு அக்கட்சியால் கொடுக்கப்பட்ட அமைச்சர் பிரதிநிநிதித்துவம் மதுரைக்கு கொடுக்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர். விரைவில் நடக்க உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் மதுரையில் ஒருவருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், மேலூர் தவிர மற்ற 8 தொகுதிகளில் தவெக வென்றது. முன்னாள் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், செல்லூர் ராஜு, உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா போன்ற தனிப்பட்ட அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த ஜாம்பவான்களை போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெகவினர் வீழ்த்தி வெற்றி பெற்றனர். ஆனால், அமைச்சரவையில் உள்ளூர் தவெகவினருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று அக்கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.

அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்ட திருப்பரங்குன்றம் எம்எல்ஏ நிர்மல் குமார், குடும்பத்தோடு சென்னைக்கே இடம்பெயர்ந்துவிட்டதால் வார விடுமுறை நாட்களில் மட்டுமே மதுரைக்கு தலைகாட்டுவதாகவும், அவர் மாநில அரசியலைத் தாண்டி மாவட்ட அரசியல், மக்கள் பிரச்சினைகள், மதுரைக்கான தேவைகள், திட்டங்களை நிறைவேற்ற நேரமில்லாமல் ஓடுவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், நிர்மல் குமார் மதுரை மாவட்டத்தின் ஒரே தவெக அமைச்சர் என்பதை மறந்து சென்னையில் இருந்து வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியோடு தனது பணி முடிந்துவிட்டது என நினைப்பதாக தவெகவினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு அமைச்சரான மேலூர் தொகுதியில் வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் கடலூரைச் சேர்ந்தவர் என்பதால் அவருமே மதுரையில் ஏதாவது நிகழ்ச்சிக்கு வரும்போது மட்டுமே தலைகாட்டுகிறார்.

இரு அமைச்சர்களும், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அதிகாரிகளுக்கு வழிகாட்டவும், மாவட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்நிலையில் முதல்வர் விஜய்யின் தொடக்க கால ரசிகராக இருந்து எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற்ற மேற்கு எம்எல்ஏ தங்கபாண்டியன், வடக்கு எம்எல்ஏ கல்லாணை, கிழக்கு கார்த்திகேயன் ஆகியோர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவற்றை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் மதுரை மாவட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததும், அரசிடம் நேரடியாகப் பேசி திட்டங்களைக் கொண்டு வருவதில் நீடிக்கும் சிக்கல்களும் மற்றொரு அமைச்சருக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

தவெக அமைச்சரவையை விரைவில் விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், மதுரைக்கு கூடுதலாக ஓர் அமைச்சரை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தவெக மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறியது: “தங்கப்பாண்டியன், கல்லாணை, கார்த்திகேயன் ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பினர். ஆனால், மூவருக்குமே கொடுக்காமல் அதிமுக, பாஜக போன்ற பல கட்சிகளில் இருந்து கடைசி நேரத்தில் தவெக-வில் இணைந்து எம்எல்ஏ ஆக வெற்றி பெற்ற நிர்மல் குமாருக்கு வழங்கப்பட்டது. முதல்வரின் இந்த முடிவில் தற்போது வரை மதுரை மாவட்ட தவெகவினருக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாத அதிருப்தியும், வருத்தமும் இருக்கிறது.

தங்கள் வருத்தங்களை பொதுச் செயலாளர் ஆனந்த்திடம் முறையிட்டுள்ளனர். இரு தரப்பு பஞ்சாயத்தால் மதுரை தவெகவில் அமைச்சர் நிர்மல் குமாருக்கும், தவெக எம்எல்ஏக்களுக்கும் சரியான பேச்சுவார்த்தையே இல்லாமல் கோஷ்டி பூசல் நீடிக்கிறது. தவெக எம்எல்ஏக்களை அமைச்சர் தரப்பும், அமைச்சரைப் பற்றி எம்எல்ஏக்கள் தரப்பும் முதல்வரின் கவனத்துக்கு புகார் மனுக்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வாய்ப்பைப் பெற தங்கப்பாண்டியன், கல்லாணை, கார்த்திகேயன் ஆகியோர் பொதுச்செயலாளர் ஆனந்த் மூலம் முயற்சிக்கின்றனர்.

கார்த்திகேயன் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியிடம் நெருக்கமாகப் பழகி அரசியல் அனுபவம் பெற்றவர். திமுகவில் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். முன்னாள் அமைச்சர் மூர்த்தியை எதிர்த்துப் போட்டியிட அனைவரும் தயங்கிய நிலையில் தைரியமாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர்.

கல்லாணை, தங்கப்பாண்டியன் ஆகியோர் முதல்வர் விஜய்யின் தொடக்க காலம் முதல் உடன் இருந்தவர்கள். மூவரில் யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்பது தெரியவில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT