திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.

 
தமிழகம்

​திருவள்ளூர் - பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 2 பெண் தொழிலாளர்கள் பலி

கவலைக்கிடமான நிலையில் பலருக்கு தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்​சாலை​யில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டு 2 பெண் தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் வட மாநிலங்​களைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் 63 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயிரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில்இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.

நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலா​ளர்​களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்​பட்​டுள்​ளது.

இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் எனமொத்​தம் 65 தொழிலா​ளர்​கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வரு​வாய்த் துறை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பல்​வேறு வாக​னங்​கள் மூலம் அருகே உள்ள மருத்​து​வ​மனை களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

இதில், மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்​பெண்​ணும், செங்​குன்​றம் அருகே உள்ள சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 20 பேரில் ஒடி​சாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்​பெண்​ணும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர்.

பெரிதும் பாதிப்​புக்கு உள்​ளான 7 தொழிலா​ளர்​கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொது​மருத்​து​வ​மனைக்​கும் மேல் சிகிச்​சைக்​காக மாற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாகஇருப்​ப​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, அருண்​ராஜ், ராஜ்மோகன், குமார் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் விஜயகு​மார், ரவி, அருண்​கு​மார் ஆகியோ​ரும் மருத்​து​வ​மனை​களுக்கு சென்று தொழிலா​ளர்​களை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தனர். திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் கவி​தா, காஞ்​சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திரு​வள்​ளூர் மாவட்ட எஸ்​.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்​சாலை​யில் ஆய்வு நடத்​தினர்​.

இதற்​கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழு​வினர், கும்​மிடிப்​பூண்டி உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்​களு​டன் இணைந்து பாது​காப்பு உபகரணங்​களு​டன் சம்பவ இடத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர். தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய அதி​காரி​களும் தொழிற்​சாலை​யில் ஆய்வு மேற்​கொண்​டு வரு​கின்​றனர்.

தொழிற்​சாலை​யைச் சுற்றி ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். அங்கு பணி​யாற்​றிய தொழிலா​ளர்​களில் 100-க்​கும் மேற்​பட்​டோர் மாவட்ட நிர்​வாகம் ஏற்​பாட்​டில் அரு​கில் உள்ள திருமண மண்​டபங்​களில் தங்க வைக்​கப்​பட்​டு, மருத்​து​வப் பரிசோதனை, உணவு உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​பட்​டுள்​ளன.

3 பேர் கைது: அமோனியா வாயு கசிவு தொடர்​பாக பெரிய​பாளை​யம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, தொழிற்​சாலை உரிமை​யாளர்​கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலா​ளர் டேனியல்​ ஆகிய 3 பேரை கைது செய்​து வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​. தொழிற்​சாலை செயல்​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

முதல்வர் விஜய் அறிவிப்பு:

முதல்​வர் விஜய் வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பு: இந்த விபத்து குறித்து தொழில​கப் பாது​காப்பு மற்​றும் சுகா​தா​ரத் துறை இயக்​குநர், பொது சுகா​தா​ரத் துறை கூடு​தல் இயக்​குநர், தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய உறுப்​பினர் - செயலர் தலை​மை​யில் ஆய்வு மேற்​கொண்டு முதல்​கட்ட விசா​ரணை அறிக்​கையை 24 மணி நேரத்​துக்கு உள்​ளாக​வும், முழு விசா​ரணை அறிக்​கையை 3 நாட்​களுக்கு உள்​ளாக​வும் சமர்ப்​பிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.

இந்த சம்​பவத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர் என்ற செய்​தி​யைக் கேட்டு மிக​வும் அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அடைந்​தேன். அவர்​களது குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​வதோடு, முதல்​வர் பொது நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்​சம் வழங்​க​வும் உத்​தர​விட்​டுள்​ளேன். அவர்​களது உடலை சொந்த மாநிலத்​துக்கு அனுப்பி நல்​லடக்​கம் செய்ய அரசு செல​வில் நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

மருத்​து​வ​மனை​யில் உள்​ளவர்​களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்​க​வும், உயி​ரிழந்த மற்​றும் பாதிப்​படைந்த தொழிலா​ளர்​களுக்​கு, தொழிலா​ளர் மாநில ஈட்​டுறுதி காப்​பீட்டு (இஎஸ்ஐ) திட்​டம், வேலை​யாள் இழப்​பீடு சட்​டத்​தின்​கீழ் உரிய இழப்​பீடு வழங்க நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

வருங்​காலங்​களில் இது​போன்ற விபத்​துகளை தவிர்க்​கும் நோக்​கில், பேர​பாய தொழிற்​சாலைகளில் உடனடி​யாக ஆய்​வு​கள் மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன். தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர், எம்​எல்ஏ, மாவட்​டக் கண்​காணிப்பு அலு​வலர், மூத்த ஐஏஎஸ் அதி​காரி, மாவட்ட ஆட்​சி​யர் இணைந்து சம்பவ இடத்​தில் நேரடி​யாக ஆய்வு செய்து தக்க மேல்​ நட​வடிக்​கை​ எடுக்குமாறு அறிவுறுத்தியுள்​ளேன்​ என்று முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

ஆய்வு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் உறு​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாநில தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரி​வித்​துள்​ளார். இந்த சம்​பவத்​தில் 7 பேர் உயி​ரிழந்​த​தாக முதலில் தகவல் வெளி​யான நிலை​யில், 2 பேர் மட்​டுமே உயி​ரிழந்​த​தாக பின்​னர் அதி​காரப்​பூர்​வ​மாக தெரிவிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT