மாமல்லபுரம் கடற்கரை கோயில் முகப்பு பகுதியில் தொல்லியல்துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸ்

 
தமிழகம்

தென்மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து

கோ.கார்த்திக்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை வருகைதர உள்ள நிலையில், நிர்வாக காரணங்களுக்காக காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் ஈசிஆர் சாலையையொட்டி உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தென்மாநில முதல்வர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை சென்னை வருகிறார்.

இந்த மாநாட்டில், பெண்களின் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இன்று விடுதியில் தங்கும் உள்துறை அமைச்சர், இரவு பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாளை முதல்வர்களுடனான மாநாடு நிறைவடைந்ததும், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் பாராம்பரிய கலை சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணைய் உருண்டை பாறை உள்பட பல்வேறு கலைச் சின்னங்களை நேரில் கண்டு ரசிக்க உள்ளார். இதனால், மாமல்லபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன், எஸ்பி ஐமன்ஜமால் தலைமையில் போலீஸார் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும், டெல்லியிலிருந்து வந்து பாதுகாப்புப் படையினர் மத்திய அமைச்சர் பார்வையிடும் கலை சின்ன பகுதிகள் மற்றும் நகருக்குள் அழைத்து வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் கலைச் சின்னங்களை பார்வையிட உள்ள நிலையில், நிர்வாக காரணங்களுக்காக நாளை காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் கலைச்சின்னங்களை பார்வையிட, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் கலைச்சின்னங்களின் முகப்பு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் வருகை தர உள்ளதால், நகரப் பகுதியில் பல்வேறு சுகாதார பணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT