அமித் ஷா

 

படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

“இண்டியா கூட்டணியில் பதவிக்காக சண்டை... கனவுலகில் ராகுல்!” - புதுச்சேரியில் அமித் ஷா கிண்டல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “இண்டியா கூட்டணியில் புதுச்சேரியில் பதவிக்காக இப்போதே சண்டை போடுகின்றனர். ராகுலோ கனவுலகில் மிதந்து பாகிஸ்தான் விலை உயர்வு பற்றி கூறி மக்களை பயமுறுத்துகிறார்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டலுடன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி மாநில பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுாரில் பிரச்சார பொதுக் கூட்டம் இன்று மாலை நடந்தது. மண்ணாடிப்பட்டு தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான நமச்சிவாயம் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “காங்கிரஸின் நாராயணசாமி ஆட்சி புதுச்சேரி மாநிலத்தை பின்னோக்கி தள்ளிவிட்டது. இதை சரிசெய்யவே 5 ஆண்டுகள் சரியாகிவிட்டது.

இப்போது புதுச்சேரி வளர்ச்சியை நோக்கி செல்ல மீண்டும் என்டிஏ கூட்டணி வெற்றி பெற வேண்டும். கடந்த முறை புதுச்சேரியில் என்டிஏ வெற்றி பெற்றதை காங்கிரஸ் தலைவர் கார்கே, இந்தியாவில் ஒரு சிறிய இடத்தில் வெற்றி பெற்றதை பெருமையாக பேசுகிறீர்கள் என எள்ளி நகையாடினார்.

          

300 இடமாக இருந்தாலும், 30 இடமாக இருந்தாலும் புதுச்சேரி இந்தியாவின் ஓர் அங்கம். எங்கள் இதயத்தில் உள்ளது புதுச்சேரி. பாரதத்தின் வெற்றிக்கு புதுச்சேரியின் வெற்றி மிகவும் அவசியம். நானும் பல தேர்தலை சந்தித்துள்ளேன். ஆனால், வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடியும் என நம்பிக்கை வந்தது இல்லை. ஆனால் நமச்சிவாயம் பல வேலைவாய்ப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் இண்டியா கூட்டணியில் இப்போதே தொகுதிக்காக, பதவிக்காக, சண்டை போட்டு அடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுகின்றனர். திமுகவும், காங்கிரஸும் கூட ஒன்றாக இல்லை. அவர்கள் 5 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கின்றனர். நமது கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றாக உறுதியாக ஒற்றுமையை பறைசாற்றுகிறது.

நாராயணசாமி ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருந்தது. மருத்துவ இடஒதுக்கீடு இடங்களை கூவி, கூவி விற்றனர். 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ், திமுக சென்டாக் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சிஏஜி அறிக்கையில் கூறிய இந்த ஊழல் தொகையில் புதுச்சேரியின் 3 ஆண்டு பட்ஜெட் போட்டிருக்கலாம்.

வளைகுடா போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என ராகுல் கூறியுள்ளார். ராகுல் கனவுலகில் மிதக்கிறார். அவர் கூறியது உண்மைதான். பெட்ரோல் ரூ.458, டீசல் ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. அது இந்தியாவில் இல்லை, நீங்கள் நேசிக்கும் பாகிஸ்தானில்தான் இந்த விலை விற்கிறது.

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வார வேலை நாட்கள் 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்ய கூறி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த நிலை இருக்கிறதா? மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய்கூட உயர்த்தப்படவில்லை.

ஒவ்வொரு துறையாக வளர்ச்சி திட்டங்களை கொடுத்து புதுச்சேரியை முன்னேறிய மாநிலமாக ஆக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆனால் ராகுல் பாகிஸ்தான் விலை உயர்வை கூறி மக்களை பயமுறுத்துகிறார்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT