அமித் ஷா
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து டெல்லியில் அண்மையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக பாஜக மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், வாக்கு வங்கி நிலவரம் மற்றும் தமிழகத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்துக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அல்லது கோவையில் நடைபெறவுள்ள மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வியூகங்கள், கட்சி நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமித் ஷா முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார். அமித் ஷாவின் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அவர் ஒதுக்கும் நேரத்தைப் பொறுத்து பிரம்மாண்டமான முறையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க தமிழக பாஜகவினர் இப்போதே தயாராகி வருகின்றனர்.