அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
தொகுதி பங்கீடு தொடர்பாக எங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அமித் ஷாவும் பழனிசாமியும் பேசி சுமூகமாக உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து முடிவை அறிவிப்பார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வருவோர் போவோரை எல்லாம் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு நாங்கள் பலமாக இருக்கிறோம் என திமுகவினர் கூறுகிறார்கள். ஏற்கெனவே பலமான கூட்டணி என்று கூறிவிட்டு, மீண்டும் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன ? இதற்கு காரணம் இந்த ஆட்சி மேல் மக்களுக்கு பெரிய அதிருப்தி இருப்பது தான். வரும் தேர்தலில் மக்கள் ஒரு அமைதிப் புரட்சி செய்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச்செய்வார்கள்.
தொகுதி பங்கீட்டில் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது. அனைவரும் நட்புடன் இருக்கிறோம். பழனிசாமியும், அமித் ஷாவும் பேசி சுமூகமாக உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து முடிவை அறிவிப்பார்கள். 8 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருக்கும் திமுக, காங்கிரஸ் இடையே கூட தொகுதி பங்கீட்டின் போது சலசலப்பு ஏற்பட்டது. அதுபோல எதுவும் நடக்காமல் நாங்கள் உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். தே.ஜ. கூட்டணியில் விஜய் இணைவார் என்பதால் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளி போவதாக கூறுவது வெறும் யூகம். அவருக்காக காத்திருக்கவில்லை.
தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மே மாதத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.