அமல்ராஜ்
சென்னை: சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் மாற்றப்பட்டு ஏ.அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த அபின் தினேஷ் மோடக், சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்தார்.
சென்னையின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ், 1996-ம் ஆண்டு தமிழக பிரிவு நேரடி ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உதவி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கினார்.
பின்னர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை துணை ஆணையராகவும், தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.பி.யாகவும் பணியாற்றினார்.
பின்னர், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம், திருச்சி, சேலம் சரகங்களில் பணியாற்றினார். ஐ.ஜி.யான பிறகு, சேலம், கோவை, திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றினார்.
மத்திய மற்றும் மேற்கு மண்டலங்களின் காவல் தலைவராகவும், சென்னை காவல் தலைமையகத்தின் கூடுதல் ஆணையராகவும் பணியாற்றினார். தொடர்ந்து, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் காவல் ஆணையர், அமலாக்கப் பிரிவு சிஐடியிலும் பணியாற்றினார்.
சிறந்த சட்டம் - ஒழுங்கு அதிகாரி என பெயர் பெற்றவர். தற்போது சென்னையின் 112-வது காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 1971 நவம்பர் மாதம் பிறந்தவர் அமல்ராஜ்.
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பையும், திருச்சியில் இளங்கலை, முதுகலைப் படிப்புகளையும் முடித்தார். காவல் பணியில் சேர்ந்த பிறகு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேலாண்மையில் எம்பிஏ பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
மாநிலக் காவல் துறை விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடும் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
காவல் துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மை பண்புகள், வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம், சிறகுகள் விரித்திடுக, போராட கற்றுக்கொள் ஆகிய 5 நூல்களை எழுதி உள்ளார்.
முதல்வர் பதக்கம்
சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், மெச்சத்தக்க சேவைக்கான காவல் துறை பதக்கம், முதல்வரின் சிறப்புச் செயல்பாடு பதக்கம் மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்கியமைக்கான முதல்வரின் பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.