சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வரும் கட்சிகளில் பெரும்பாலானவை, ‘ப்ளஸ் ஒரு ராஜ்ய சபா சீட்’ என்ற கோரிக்கையையும் கூடவே கொண்டு வருவதால் ராஜ்யசபா தேர்தலை எப்படிச் சமாளிப்பது, யாருக்கு சீட் ஒதுக்குவது என்பது இம்முறை திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு, அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் கடந்த முறை அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாகும் இந்த 6 இடங்களில் 4 இடங்கள் திமுக-வுக்கும் 2 இடங்கள் அதிமுக-வுக்கும் மீண்டும் உறுதியாகலாம்.
இதில், அதிமுக கோட்டாவில் ஒன்றை அன்புமணிக்கு ஒதுக்குவதாக ஏற்கெனவே பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எஞ்சி இருக்கும் ஒரு சீட்டை சொந்தக் கட்சிக்கு ஒதுக்கினால் மட்டுமே பழனிசாமி தலை தப்ப முடியும். ஆனால், அந்த இடத்தை மீண்டும் அதிமுக தனக்கு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஜி.கே.வாசன். இவரைப் போலவே, அதிமுக கோட்டாவில் ராஜ்யசபாவுக்குச் செல்ல அமித் ஷா மூலம் தினகரனும் அச்சாரம் போடுகிறார். இதனால் இம்முறை ராஜ்ய சபா கோட்டாவை யாருக்கு ஒதுக்குவது என்பதில் அதிமுக பெரும் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
திமுக தரப்பிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் இருக்கின்றன. தங்கள் வசம் உள்ள நான்கு சீட்களில் ஒன்றை நிச்சயம் மீண்டும் திருச்சி சிவாவுக்கு ஒதுக்கிவிடும் திமுக. அதேபோல் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரும் இம்முறை ராஜ்யசபா வேட்பாளர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவர் இல்லாவிட்டாலும் இன்னொரு சீட்டையும் சொந்தக் கட்சிக்கே திமுக ஒதுக்கும். எஞ்சிய இரண்டு இடங்களில் ஒன்றை, கூட்டணியில் இணைந்த தேமுதிக-வின் சுதீஷுக்காக ஒதுக்க வேண்டி வந்தாலும் வரலாம். எஞ்சிய ஒரு சீட்டுக்கு காங்கிரஸ், மதிமுக, விசிக என மூன்று கட்சிகள் முட்டிமோதக் காத்திருக்கின்றன. இவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்தால் மட்டுமே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் என்பதால் இந்த விவகாரத்தில் திமுக-வும் இன்னும் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் இருக்கிறது.
ஆக, 234 சட்டமன்றத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு வைப்பதைவிட, 6 ராஜ்யசபா சீட்களை பங்கிடுவதில் தான் ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் இம்முறை ஆகப்பெரும் தலையிடி இருக்கும் போலிருக்கிறது.