தமிழகம்

உறவினர்கள் மீது பாலியல் புகார் அளிக்க சிறுமிகளை அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார்: உயர் நீதிமன்றம் வேதனை

செய்திப்பிரிவு

மதுரை: குடும்ப பிரச்சினையை தீர்க்க அவசர அழைப்பில் தொடர்பு கொள்ளும் சிறுமிகளை தந்தை மற்றும் உறவினர்கள் மீது பாலியல் புகார் அளிக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

விருதுநகரை சேர்ந்த ஒருவர், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், மனுதாரரின் மகள் செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை மனுதாரர் கண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்த பின்னணியில் சிறுமி ‘1098’ என்ற எண்ணில் பேசியுள்ளார். அவரிடம் பேசிய அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சிறுமியின் வாக்குமூலத்தில், தாய், தந்தையின் சண்டையை முடிவுக்கு கொண்டு வர ‘1098’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டதாகவும், அந்த அழைப்பை ஏற்ற அதிகாரி, அவரது தந்தை அவரை ‘மோசமாகத் தொட்டது’ போல ஒரு புகாரை அளிக்க வற்புறுத்தியதாகவும், அவர் தூண்டுதலின் பேரில் தான் மனுதாரருக்கு எதிராக அந்த குற்றச்சாட்டை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மிரட்டல்

மேலும் அந்த சிறுமி, 5 நாட்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டபோது குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் மிரட்டி, தனது தந்தைக்கு எதிராக புகார் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க சிறுமிக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதேபோல், சில வழக்குகளில் தந்தைக்கு எதிராக பாலியல் புகார் அளிக்க சிறுமிகளை குழந்தைகள் நலக் குழு, காப்பகங்கள் அல்லது காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் வற்புறுத்துவது தெரிய வந்துள்ளது.

இந்த கவலைக்குரிய போக்கு நீதிமன்றத்துக்கு வேதனை அளிக்கிறது. பெற்றோருக்கு இடையேயான குடும்பச் சண்டையின் பாதிப்பை வெளிப்படுத்த சிறுமி, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளை அணுகியுள்ளார். இது இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகும்.

‘1098’ மூலம் பெறப்படும் புகார்களுக்கு பதிலளிக்கும் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள், காப்பகம், காவல்துறை பணியாளர்களுக்கு பொருத்த மான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்க அவரது மகளை குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது தொடர்பாக தென் மண்டல ஐஜி விசாரித்து 2.7.2026-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான மனுதாரருக்கும், சிறுமிக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT