புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தன. விமலிடம் இருந்து ரூ.4.50 கோடியை வாங்கிக் கொண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏமாற்றி விட்டார் என அதிமுக மாவட்டச் செயலாளர் வி.பழனிவேல் குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டம் ஆதனக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.பழனிவேல் பேசியதாவது: தேர்தலுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தின்போது, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்துதான் செலவு செய்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு என்னிடமும், முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியனிடமும், சொத்தை விற்றாவது பணம் ஏற்பாடு செய்து வருமாறு தெரிவித்தார்.
ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தன.விமலிடமிருந்து சீட்டுக்காக ரூ.4.50 கோடியை விஜயபாஸ்கர் வாங்கியிருக்கிறார். அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. பணத்தைக் கட்சிதான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அவர் எங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை பயன்படுத்தி சம்பாதித்த சி.விஜயபாஸ்கர், தவெகவினருக்கு கார் வாங்கிக் கொடுக்க இருப்பதாகத் தகவல் வருகிறது. இதற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் நேருக்கு நேர் சந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.