சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிகள், பராமரிப்பு மற்றும் அன்றாடச் சேவைகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை (டெண்டர்) `1998-ம் ஆண்டு தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்' கீழ் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட கோயில் டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமே ஆதரவாக டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அறநிலையத் துறையில் நிலவும் டெண்டர் நடைமுறைகளைச் சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை, இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து டெண்டர் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டதாகக் கருதப்படும் சில கோயில் டெண்டர்களை ரத்து செய்யத் துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெண்டர் விடுவதில் எவ்வித பாரபட்சமும் இருக்கக்கூடாது என்பதற்காக, தற்போதைய நடைமுறைகள் திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் புதிய மற்றும் வெளிப்படையான வழிகாட்டு நெறிமுறைகளை அறநிலையத் துறை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.