கும்பகோணம்: “தமிழக முதல்வர் விஜய்யின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் புதுப்பிக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருவோம்” என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் மகாமக பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் விழா தொடர்பான கோயில்கள், குளங்கள் உள்ளிட்டவை நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று மீதம் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழாவை முதல்வர் சிறப்பாக நடத்த வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
மகாமகம் தொடர்புடைய 12 சைவ, 5 வைணவ மற்றும் பட்டீஸ்வரம், சுவாமி மலை உள்ளிட்ட சிறப்பு பெற்ற கோயில்களில் என்ன மாதிரியான திருப்பணி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
இங்குள்ள கோயில்களைப் பார்க்கும்போது, கடந்த ஆட்சியாளர்கள், கடந்த 5 ஆண்டுகளில் அப்படி இப்படி பண்ணியிருக்கேன் என்று சொன்னார்கள். ஆனால் கோயில்கள் அனைத்தும் மிகவும் மோசமாக உள்ளது. நாகேஸ்வரன் கோயிலுக்குள் சென்றால், அந்தக் கோயிலில் கழிவுநீர் செல்ல போதிய வசதி இல்லை. துர்நாற்றம் வீசுகின்றது. அனைத்து அதிகாரிகளும் கடந்த 5 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்காததால் அப்படி உள்ளன. கோயில்களை சீரமைக்கவில்லை, போதிய அடிப்படை வசதியே இல்லாமல் உள்ளது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என திட்ட மதிப்பீடு போடப்பட்டு பணிகள் தொடங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
இதேபோல் சுவாமிமலை முருகன் கோயிலில் இருளடைந்து காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள், அறநிலையத் துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. ஆனால் கடந்த ஆட்சியாளர்கள், தமிழகத்திலேயே திமுக தான் கோயில்களில் திருப்பணி உள்ளிட்ட அனைத்தும் செய்தோம் என கூறுகிறார்கள். ஆனால் முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுவாமிமலை கோயிலுக்குள் சென்று பார்த்துள்ளாரா? அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள்.
தவெக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து கோயில்களுக்கு சென்று அங்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, சரிசெய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்து அந்தப் பணிகள் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் புதுப்பிக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருவோம்” என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.