மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதில் ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை - மகன் காவல் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஜெயராஜ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் இருந்துபோது கரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிபிஐ ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது மனு தள்ளுபடியானது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் இன்று (மார்ச் 23) தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன.
இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். போலீஸார் இரவு முழுவதும் இடைவெளி விட்டு தன்னை தாக்கியதாகவும், 200 முறைக்கு மேல் தனது பின்பகுதியில் தாக்கியதாகவும் உறவினர்களிடம் பென்னிக்ஸ் தெரிவித்துள்ளார்.
தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளனர்.
போலீஸ் தாக்கியதில்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும். இவர்களது சம்பள விவரங்களை தூத்துக்குடி எஸ்.பி.யும், சொத்து விவரங்களை தூத்துக்குடி, நெல்லை, தேனி எஸ்.பி.க்களும், நன்னடத்தை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிபதி முத்துக்குமரன் 265 பக்க தீர்ப்பை மாலை 4 மணிக்கு வாசிக்கத் தொடங்கி 5.30 மணிக்கு முடித்தார். முன்னதாக, 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களை சிறையில் அடைக்கவும், மார்ச் 30-ல் தண்டனை அறிவிப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். தொடர்ந்து 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
‘உச்சபட்ச தண்டனை’
தீர்ப்பைக் கேட்பதற்காக, கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் வந்திருந்தனர். தீர்ப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் செல்வராணி மற்றும் அவரது மகள்கள் கூறியபோது, “இதுபோல வேறு எந்த குடும்பமும் பாதிக்கப்படக்க கூடாது. 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றனர்.