மதுரை: மதுரை மாவட்டத்தில் தைப் பொங்கலையொட்டி புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17-ம் தேதி நடைபெறுகிறது.
தைப் பொங்கலையொட்டி மதுரையில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட தமிழகம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வருவார்கள். இதையொட்டி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பின்னர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு உயிரிழப்பு இல்லாத, பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டார்.
அதன் விவரம்: வருவாய்த் துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பங்களில் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் காளைகளின் பட்டியலுடன், அனுமதிக்கப்படும் காளைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் தினத்தன்று, 5 கி.மீ. சுற்றள வுக்கு அருகில் உள்ள அனைத்து கிணறுகளும் மூடப்பட வேண்டும்.
கால்நடை துறையினர் காளைகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். கால்நடை மருத்துவக் குழுக்கள், அவசர நிலைக் குழுக்களை அமைக்க வேண்டும். காளைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு, தகுதியற்ற காளைகளை நிராகரிக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு முழு உடல் தகுதி, ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ள வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு முறையான முதலுதவி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
பொதுப்பணித் துறையினர் பார்வையாளர் கேலரி, இரட்டைத் தடுப்புகள் உறுதிச் சான்று வழங்கல், இரட்டை அரண்கள் குறைந்த பட்சம் 100 மீட்டர் நீளம், 8 அடி உயரத்துக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் போட்டி நடைபெறும் இடத்தில் போதுமான எண்ணிக்கையிலான காவலர்களை நியமித்து சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும். அங்கீகரிக்கப் பட்ட காளைகள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்து, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து விதி மீறலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் விழாக் குழுவினர் முன் அனுமதி பெற்று, அனுமதிக்கப்படும் காளைகள் பட்டியலை வழங்க வேண்டும். பார்வையாளர்களுக்கு உணவு, குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.மாட்டின் உரிமையாளர்கள் காளைகளை உரிய விதிமுறைபடி ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு அழைத்துவர வேண்டும். காளைகளுக்கு போதுமான ஓய்வு மற்றும் அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
காளைகளின் உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயர்களை அறிவிக்கக் கூடாது. மேலும், ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மற்றும் பங்கேற்பவர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா, காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.